திருவனந்தபுரம்: கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் கைதாகி விடுதலையான ஸ்வப்னா சுரேஷ், இந்த வழக்கில் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக புகார் தெரிவித்தார். இந்நிலையில், முதல்வர் கண்ணூரில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்றார்.
அப்போது, விமானத்தில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் பினராயி விஜயனுக்கு எதிராக முழக்கமிட்டனர். அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி விமானத்தின் உள்ளேயே போராட்டம் நடத்தினர். மட்டனூர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பர்சின் மஜீத், மற்றும் நிர்வாகிகள் நவீன்குமார், சுனித் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கைதுசெய்து போலீஸார், வழக்கு பதிவுசெய்து விசாரிக்கின்றனர்.
இதனிடையே, பினராயி விஜயனுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பர்சின் மஜித் மட்டனூரில் உள்ள ஏ.யூ.பி. பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, பர்சின் மஜித் 15 நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட் டுள்ளார்.
விசாரணையை தடுக்கிறார்..
மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் டெல்லியில் நேற்று கூறும்போது, ‘‘2020-ம் ஆண்டில் தங்க கடத்தல் ஊழல் வெளியானபோது, கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்த ஊழலால் நாட்டுக்கு தீவிரமான பாதிப்பு ஏற்படும் என்றும் இதுபற்றி மத்திய புலனாய்வு நிறுவனங்கள் விசாரிக்க வேண்டும் என்றும் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இப்போது, ஊழலில் அவரது பெயர் வெளியான நிலையில், மாநில போலீஸாரைப் பயன்படுத்தி மத்திய புலனாய்வு நிறுவனங்களின் விசாரணையை பினராயி விஜயன் தடுக்கிறார்’’ என்றார்.