கொலையாளிகளைத் தண்டிக்காது காப்பாற்றத் துணைபோவதும் வெட்கக்கேடு இல்லையா? கொந்தளிக்கும் சீமான்.!

அதிகரித்து வரும் காவல்நிலைய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க காவல்துறையை சீர்திருத்தம் செய்து மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை, கொடுங்கையூரில் காவல்நிலையத்தின் கட்டுப்பாட்டிலிருந்த விசாரணை சிறைவாசி ராஜசேகரும், நாகப்பட்டினம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை சிறைவாசி சிவசுப்ரமணியனும் அடுத்தடுத்த நாட்களில் மரணமடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது.

திமுக அரசு பொறுப்பேற்றது முதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காவல்நிலைய மரணங்கள், காவல்துறை எனும் அதிமுக்கியக் கட்டமைப்பு எந்தளவுக்கு சீர்குலைந்து, மக்களுக்கெதிரானதாக மாறி நிற்கிறது என்பதற்கான நிகழ்காலச் சான்றுகளாகும்.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக, மக்களைக் காத்து நிற்க வேண்டிய காவல்துறையினரே, விசாரணைக்கு அழைத்துச்செல்லப்படுவோரை அடித்துக்கொலைசெய்வதும், மரணத்திற்குக் காரணமான காவல்துறையினர் எவ்வித சட்டநடவடிக்கைகளுக்கும் உட்படுத்தப்படாது ஆட்சியாளர்களின் உதவியோடு தப்பித்துச்செல்வதுமான தொடர் செயல்பாடுகள் அரசின் பொறுப்பற்றத்தனத்தையும், மக்கள் விரோதப்போக்கையுமே வெளிக்காட்டுகிறது.

முதுகுளத்தூர் மணிகண்டன், சேலம் பிரபாகரன், திருவண்ணாமலை தங்கமணி, பட்டினப்பாக்கம் விக்னேஷ், தற்போது, கொடுங்கையூர் ராஜசேகர், நாகை சிவசுப்பிரமணியன் என நீண்டுகொண்டே செல்லும் காவல்நிலைய மரணங்கள் ஆட்சியின் அவல நிலையைப் பறைசாற்றும் கொடுந்துயரங்களாகும்.

காவல்நிலைய மரணத்தைப் பேசும் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, தூங்கவில்லையென மனமுருகும் மாண்புமிகு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள், அவரது ஆட்சிக்காலத்தில் நடந்தேறி வரும் காவல்நிலைய மரணங்களைக் கண்டும் காணாதது போல கடந்து செல்வதும், கொலையாளிகளைத் தண்டிக்காது காப்பாற்றத் துணைபோவதும் வெட்கக்கேடு இல்லையா?

ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்கான சமூக நீதி ஆட்சியென வாய்கிழியப்பேசிவிட்டு, அநீதி இழைக்கப்பட்டு இறந்துபோன எளிய மக்களுக்கான குறைந்தபட்ச நீதியைக்கூடப் பெற்றுத்தர மறுப்பது மோசடித்தனமில்லையா? ஓய்வுபெற்ற காவல்துறை உயரதிகாரிகளின் வீட்டுக்குக்கூடப் பாதுகாப்புக்கு நின்று, அவர்களுக்குப் பணிவிடை செய்யும் காவல்துறையினர், எளிய மக்கள் மீது தாக்குதல் தொடுத்து, கொலைசெய்து மூடி மறைப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா? பேரவலம்!

ஆகவே, காவல்நிலைய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, காவல்துறை எனும் அமைப்புமுறையையே மொத்தமாகச் சீர்திருத்தம் செய்து, மறுகட்டமைப்பு செய்வதற்குரிய முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டுமெனவும், கொடுங்கையூர் ராஜசேகர், நாகை சிவசுப்ரமணியன் ஆகிய இருவரது மரணத்திற்குக் காரணமான காவல்துறையினர் மீது கொலைவழக்குப் பதிவுசெய்ய வேண்டுமெனவும், இறந்துபோனவர்களின் குடும்பத்தினருக்கு 25 இலட்ச ரூபாய் இழப்பீடும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்”.

இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார். 
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.