“சாதி வித்தியாசம் பார்க்காமல், தீட்டு பார்க்காமல் புரட்சி செய்த மடம் இது" – மதுரை ஆதீனம்

அதிரடியாக பல்வேறு கருத்துகளை பேசி வரும் மதுரை ஆதீனத்தை எதிர்த்து திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சியினரையும், பெரியாரிஸ்ட்களையும் தொடர்ந்து நடிகர் விஜய் ரசிகர்களும் கூட எதிர்த்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை ஆதீனம்

ஆதீனத்துக்கு ஆதரவாக பா.ஜ.க, இந்து மக்கள் கட்சியினரும் பேசிவரும் பரபரப்பான சூழலில் மதுரை ஆதீனத்தை சந்தித்து நமது கேள்விகளை முன்வைத்தோம்…

“உங்களை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகிறார்களே?”

“தமிழ் மொழியை, நம் பண்பாட்டை, பாதுகாக்க நான் பேசுவதை தவறாக புரிந்துகொண்டு விமர்சனம் செய்கிறார்கள். செய்யட்டும் அதைப்பற்றி கவலை இல்லை. நான் தமிழர்களுக்காக குரல் கொடுப்பவன். காய்ந்த மரம்தானே கல்லடி படும், என்ன வேண்டுமானலும் சொல்லட்டும்.”

“நடிகர் விஜய்யை பற்றி நீங்கள் பேசியதால் அவர் ரசிகர்களும் தற்போது தங்களை எதிர்க்கிறார்களே?”

“எதிர்க்கட்டும். நான் ஒன்னும் தவறாப் பேசலையே. சினிமாவில் இந்துக் கடவுள்களை இழிவுபடுத்துகிறார்கள். பிற மதங்களை கிண்டல் செய்து எதிர்ப்பு வந்தால் உடனே மன்னிப்பு கேட்கிறார்கள். அதைப் பற்றி பேசினால் தவறா. எனக்கு எதிராக பேசட்டடும்?”

“மறைந்த ஆதீனம் அருணகிரிநாதர் இருந்தபோது, அவரை எதிர்த்த இந்து இயக்கங்கள் உங்களை ஆதரிக்க என்ன காரணம்?”

“உன்மையை பேசுறதுதான்..”

மதுரை ஆதீனம் பிரதமரை சந்தித்தபோது

“துறவியான யோகி ஆதித்யநாத் அரசியலுக்கு வந்ததுபோல் நீங்களும் வர ஆசைப்படுகிறீர்கள் என்று விமர்சிக்கிறார்களே?”

“சொல்லட்டும்”

“பட்டனப்பிரவேச நிகழ்ச்சி தடை நீக்கப்பட்டதற்கு மடத்தை விட்டு வெளியில் வந்து நீங்கள் இனிப்பு வழங்கியதும் விமர்சிக்கப்பட்டதே?”

“மடாதிபதிகள் வெளியில் வருவதில்லை. மக்களோடு இருப்பதில்லை என்று குற்றம் சொன்னார்கள். அதான் வெளியில் வந்தேன். இப்பவும் மடத்தின் கதவுகளை திறந்து வைத்துள்ளேன். அனைத்து மக்களும் இங்கு வரலாம். நானும் யார் அழைத்தாலும் அவர்களின் நிகழ்ச்சிக்கு செல்கிறேன். இப்படி செய்தாலும் தப்பு என்கிறார்கள்”

“ஆதீன மடத்துக்கு நிறைய வருவாய் வந்தும், மக்களுக்கு எந்த சேவையும் செய்வதில்லை என்று முன்பு சொல்லப்பட்டது. தாங்கள் வந்த பின்பு மாற்றத்தை செய்துள்ளீர்களா?”

“நான் ஆதீன பொறுப்புக்கு வந்த பின்பு தேவார பாடசாலை திறந்து மாணவர்களுக்கு சைவத் திருமுறைகளை கற்றுக் கொடுக்கிறோம். தமிழ் மொழியில் முதலாவதாக வரும் பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்குகிறோம். நான் முன்பு கன்னியாகுமரி, கரூரில் இருந்தபோது பிள்ளைகளை திருக்குறள் சொல்ல சொல்வேன். சொல்கின்ற பிள்ளைக்கு 50 ரூபாய் கொடுப்பேன். இப்போதும் மடத்துக்கு வருகிற பொருள்களை, உதவி கேட்டு வரும் மக்களுக்கு வழங்குகிறேன்.

வெளியில் செல்லும்போது படை பரிவாரங்களோடு செல்வதில்லை. எளிமையாக சென்று வருகிறேன். இங்கு பல முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை வெளியேற்றியுள்ளேன். மடத்தின் சொத்துகளை மீட்டு வருகிறோம். தமிழில் குடமுழுக்குகளை நடத்தி வைக்கிறேன். சைவத் தமிழை வளர்க்க நூல் வெளியிடுகிறோம். தமிழ் தொண்டாற்றுகிறவர்களை கௌரவிக்கிறோம். இதையெல்லாம் செய்கிற என்னைத்தான் விமர்சிக்கிறார்கள்.”

மதுரை ஆதீனம்

“மடத்துக்கு எதிராக நித்யானந்தா தாக்கல் செய்த வழக்குகள் எந்த நிலையில் உள்ளது?”

“அதையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்வோம்.”

“புகழ்பெற்ற சைவ மடத்தில் நீங்கள் பொறுப்பேற்ற பின்பு அதிகமாக சர்ச்சையாக்கப்படுவது ஏன்?”

“அப்பர் சுவாமிகளையே கல்லைக்கட்டி கடல்ல போட்டார்கள். என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்”

“நீங்கள் பா.ஜ.க ஆதரவு அமைப்பு நடத்திய துறவியர் மாநாட்டில் பேசியது தவறு என்று சில கட்சியினர் சொல்கிறார்களே”

“அது பா.ஜ.க நடத்திய கூட்டமல்ல. விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்தியது. அதில் இந்து மதப் பிரச்னைகளை பற்றித்தான் பேச முடியும். அதே நேரம் தி.க.காரர் வீட்டு விசேஷத்திலும் கலந்து கொண்டிருக்கிறேன். சாப்பிட்டிருக்கிறேன். இவ்வளவு ஏன்? சின்ன வயதில் புளியங்குடி சர்ச் விழாவுக்கு எங்க ஊர்லருந்து நடந்தே போய் பார்த்திருக்கிறேன். நான் அனைத்து விழாக்களிலும் கலந்து கொண்டவன். இதுவரை ஆதீனங்கள் யாரும் செய்யாத வகையில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செய்திருக்கிறேன். மருது பாண்டியர் நிகழ்ச்சிக்கு சென்றேன். திருப்புவனத்தில் துப்பாக்கி கவுண்டர் விழாவில் கலந்துகொண்டிருக்கிறேன்.”

“பிரதமர் மோடியை சந்தித்தபோது தேவாரம் பாடினீர்களா?”

“பாடினேன்.”

“முந்தைய ஆதீனம் திராவிட இயக்கங்களோடு தொடர்பில் இருந்தார். நீங்கள் அப்படி இல்லாததுதான் சர்ச்சையாகிறதா?”

“நானும் திராவிட இயக்கத்தினர் கூப்பிடும் நிகழ்ச்சிகளுக்கு சென்றிருக்கிறேன். விடுதலை பத்திரிக்கையை தினமும் படிக்கிறேன்.”

“ஆதீனங்கள் அரசியல் பேசக்கூடாது என்று சொல்கிறார்களே?”

“திருஞானசம்பந்தர் நாமார்க்கும் குடியல்லாம் என்றார். சமண மதத்துக்கு சென்ற கூன் பாண்டியனை சைவ மதத்துக்கு திரும்ப கொண்டு வந்து நிமிர்ந்த நெடுமாறனாக்கியது இந்த மடம். 7-ஆம் நூற்றாண்டிலிருந்து அரசர்களை திருத்திய பெருமை மிகு மடம் இது. சைவக்கட்சியான திருஞானசம்பந்தர் மதுரைக்கு வரும்போது இங்க சமணக்கட்சி இருந்தது. மடத்துக்கு நெருப்பெல்லாம் வச்சாங்க. பல கொடுமைகளைக் செஞ்சாங்க. அதோடதான் பாண்டியனுக்கு வெப்பு நோய் வந்து, பின்பு திருந்தி திருஞானசம்பந்தரால் பாண்டிய நாடு பழம்பதியாக மாறியது. அந்தளவுக்கு அப்பவே அரசியல் இருந்துள்ளது..”

மதுரை ஆதீனம்

“அதே நிலைமைதான் இப்பவும் இருக்குன்னு சொல்றீங்களா?”

“அது எனக்கு தெரியலய்யா.”

“ஆதீனங்கள் ஆடம்பரமாக இருப்பாதாக விமர்சிக்கிறார்களே?”

“சாதி வித்தியாசம் பார்க்காத, தீட்டு பார்க்காத புரட்சி செய்த மடம் இது. நான் எங்கும் எளிமையாகத்தான் செல்கிறேன். கல்யாணம் காதுகுத்துக்கெல்லாம் நான் வரணும்னு அடம்பிடிச்சு கூட்டிப் போறாங்க. கல்யாணத்துக்கு தாலி எடுத்து கொடுத்து தமிழ் முறைப்படி நடத்துறேன். சோழவந்தான் பக்கத்துல ஒரு கிராமக் கோயில் விழாவுக்கு கூப்பிட்டாங்க. அங்க கார் போகாத பாதையில் 4 கிலோ மீட்டர் வேர்க்க விறுவிறுக்க நடந்தே போயி கலந்துக்கிட்டேன். மக்கள் அன்புதான் எனக்கு முக்கியம். மக்கள் தரும் கூழ் குடிக்கிறேன்.

எனக்கு மாலை போட விடமாட்டேன். பாத பூஜை செய்ய வந்தால் ஒத்துக்க மாட்டேன். எல்லோருக்கும் விபூதி பூசி விடுவேன். எந்த பாகுபாடும் நான் பார்க்க மாட்டேன். இப்படியெல்லாம் பண்றதுனாலதான் விமர்சிக்கிறாங்களான்னு தெரியல.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.