சீக்கியர்களை கேலி செய்யும் நகைச்சுவை… சர்ச்சையில் சிக்கிய கிரண் பேடி…

சீக்கியர்களை கேலி செய்யும் விதமான நகைச்சுவையை கூறி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கிரண் பேடி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமையை பெற்றவர் கிரண் பேடி. ஐபிஎஸ் பணியில் இருந்து ஓய்வு பெற்ற அவர், 2015-ம் ஆண்டு காலக்கட்டத்தில் பாஜகவில் இணைந்தார். பின்னர் புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் அவர் பதவி வகித்தார். தற்போது தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் கிரண்பேடி, அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில், தான் எழுதிய ‘ஃபியர்லஸ் கவர்னன்ஸ்’ (Fearless Governance) என்ற புத்தகத்தை சென்னையில் கடந்த திங்கள்கிழமை அவர் வெளியிட்டார். அப்போது அவர், சீக்கியர்களின் அறிவாற்றலை கிண்டல் செய்யும் விதமான நகைச்சுவையை மேடையில் கூறினார்.
image
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்து, நாடு முழுவதும் உள்ள சீக்கிய அமைப்புகள் கிரண் பேடிக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இதுதொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் பொறுப்பாளர் ஜர்னைல் சிங் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு உயிர்நீத்தவர்களில் பெரும்பாலானோர் சீக்கியர்கள். முகலாயர்கள் நமது பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற போது அவர்களை எதிர்த்து போராடியவர்கள் சீக்கியர்கள். நாட்டுக்காக தங்களையே அர்ப்பணிக்கும் இனமான சீக்கிய இனத்தை இன்னும் எத்தனை காலத்திற்கு தான் கேலி செய்வீர்கள். தனது கீழ்த்தரமான பேச்சுக்காக கிரண் பேடி மன்னிப்பு கேட்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், தனது பேச்சுக்காக கிரண் பேடி ட்விட்டரில் மன்னிப்பு பதிவை இன்று வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “எனது சமூகத்தின் மீது மிகுந்த மரியாதையை வைத்திருக்கிறேன். பாபா நானக்கின் தீவிர பக்தை நான். எனது பேச்சை யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். எனது பேச்சு யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பஞ்சாபை சேர்ந்தவரான கிரண் பேடியின் தந்தையார் இந்து மதத்தையும், தாயார் சீக்கிய மதத்தையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.