சென்னையில் வாகன நிறுத்தங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிப்பது எப்படி?

சென்னை: சென்னை மாநகராட்சி வாகன நிறுத்த இடங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சாலையோரப் போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வாகனங்கள் நிறுத்துவதற்காக 83 இடங்களில் சுமார் 7,000 வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு இடங்கள் கண்டறியப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வாகன நிறுத்த இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.20, இரண்டு சக்கர வாகனங்களுக்கு ரூ.5 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாகனம் நிறுத்தும் இடங்களில் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தி, அதற்கான கட்டணத்தை செலுத்தினால் கட்டணம் வசூலிப்பாளரின் மூலம் அலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பப்படும். இந்தக் குறுஞ்செய்தியில் உள்ள இணைப்பினை பயன்படுத்தி ரசீதினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வாகன நிறுத்த செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் ஒவ்வொரு வாகன நிறுத்த இடத்திலும், 25 மீட்டர் இடைவெளியில் அறிவிப்பு பலகைகள் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தப் பலகைகளில் வாகன நிறுத்த கட்டணம் தொடர்பான புகார் தெரிவிக்க வேண்டிய கண்காணிப்பாளர் மற்றும் மாநகராட்சியின் உரிமம் ஆய்வாளர் ஆகியோரின் தொடர்பு எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.

மேலும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வாகன நிறுத்தங்கள் தொடர்பான புகார்கள் மற்றும் குறைபாடுகள் குறித்து பொதுமக்கள் 1913 என்ற மாநகராட்சியின் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.