புதுடெல்லி: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முந்தைய அதிமுக ஆட்சியின் போது ஆவின், மின்சாரம், இந்து சமய அறநிலைத்துறை உள்ளிட்ட துறைகளில் சிலருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி, மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அதிமுக முன்னாள் நிர்வாகி விஜய் நல்லதம்பி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசிலர் புகார் அளித்தார். அதனடிப்படையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தலைமறைவாக இருந்த அவரை, ஜனவரி 5ம் தேதி கர்நாடக மாநிலத்தில் வைத்து தமிழக காவல்துறை கைது செய்து. தொடர்ந்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு தனக்கு ஒருமாதம் ஜாமின் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்தார். அம்மனுவை ஏற்ற உச்சநீதிமன்றம் ராஜேந்திர பாலாஜிக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. மேலும், அவரது பாஸ்போர்ட்டை போலீசில் ஒப்படைக்க வேண்டும். விசாரணைக்கு போலீசுக்கு ஒத்துழைக்க வேண்டும். மாவட்டத்தை விட்டு வெளியிடங்களுக்கு செல்லக் கூடாது போன்ற நிபந்தனைகளை வழங்கி இருந்தது. இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வரும் 22 முதல் 25ம் தேதி வரை நடைபெறவுள்ளதால், அந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் என்ற முறையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டி ஜாமின் உத்தரவில் 5 நாட்கள் மட்டும் தளர்வுகள் வழங்க வேண்டும் எனக்கூறி மனுதாக்கல் செய்தார். இம்மனு உச்ச நீதிமன்ற கோடைக்கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, ஹீமா கோலி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘கட்சியின் பொதுக்குழுவில் நீங்கள் (ராஜந்திர பாலாஜி) கலந்து கொள்ளவில்லை என்றால் ஒன்றும் ஆகிவிடாது. இதுதொடர்பான மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு இந்த அமர்வில் விசாரிக்க முடியாது’ எனக்கூறி அவரது கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து உத்தரவிட்டனர். இதனால் அதிமுக பொதுக்குழுவில் ராஜேந்திர பாலாஜி பங்கேற்க முடியாது என்பது உறுதியாகி உள்ளது.