டெல்லி அமைச்சர் சத்தேயேந்திர ஜெய்ன் மீதான பணப் பரிமாற்ற குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடந்த நிலையில், அவர் கடந்த காலத்தில் தனக்கு கொரோனா ஏற்பட்டிருந்ததன் காரணமாக ஞாபக சக்தியை இழந்துவிட்டதாக பதிலளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியினைச் சேர்ந்த சத்யேந்திர ஜெயின், அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக உள்ளார். கடந்த மாதம் அவரது வீட்டில் கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்தின் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. அதன் முடிவில், 4 கோடியே 81 லட்சம் ரூபாய் அளவுக்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சத்யேந்திர ஜெயின் குடும்பத்தினருக்கும், அவரது நிறுவனங்களும் இதன் மூலம் பயன் பெற்றதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. அவற்றின் அடிப்படையில், சத்யேந்திர ஜெயினை அமலாக்கத்துறை கைது செய்தது.
கைது செய்யப்பட்ட அவரிடம், அமலாக்கத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பில் தனது நினைவாற்றல் பறிபோனதாக சத்தியேந்திர ஜெயின் கூறியதாக, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர். தாங்கள் கேட்ட பல கேள்விகளுக்கு ‘ஞாபகம் இல்லை’ என்றே அவர் பதில் அளித்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தொடர்புடைய செய்தி: டெல்லி அமைச்சர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம், 133 தங்க நாணயங்கள் பறிமுதல்
பணமோசடி மற்றும் ஹவாலா பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின், நினைவாற்றலை இழந்துவிட்டதாக அமலாக்கத்துறை விசாரணையில் கூறியுள்ளது டெல்லி அரசியல் களத்தில் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM