சென்னையைச் சேர்ந்த மருத்துவரும் உளவியல் ஆலோசகருமான ஷர்மிளாவும் அவரின் டீன் ஏஜ் மகள் ஆஷ்லியும் ‘பேரன்ட்டீனிங்’ என்ற பெயரில் பெற்றோர்களுக்கும் பதின்பருவ பிள்ளைகளுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் எடுப்பவர்கள். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேலான குடும்பங்களில் மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியிருப்பவர்கள். பிள்ளைகளைக் குறைசொல்லும் பெற்றோர்களுக்கு தன் வயதினரின் குரலாக ஆஷ்லியும், பதின்பருவத்தினரிடம் பெற்றோர்கள் உணரும் பிரச்னைகளை, எதிர்பார்க்கும் மாற்றங்களை பெற்றோர் சமூகத்துக் குரலாக ஷர்மிளாவும் பகிர்ந்துகொண்ட தகவல்கள் அவள் விகடன் இதழில், 13 அத்தியாயங்களில் வெளிவந்திருக்கின்றன.
பெற்றோருக்கும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்குமான உறவுச்சிக்கல் பற்றி பகிர இன்னும் ஏராளமான விஷயங்கள் இருப்பதால் விகடன்.காமில் தொடர்ந்து பேசுகிறார்கள் டாக்டர் ஷர்மிளாவும் அவரின் மகள் ஆஷ்லியும்.
டாக்டர் ஷர்மிளா
பதின்பருவத்தில் மலரும் காதல் இயல்பானதே. தாங்களும் அந்த அனுபவத்தைக் கடந்து வந்திருந்தாலுமே பெரும்பாலான பெற்றோர்களுக்கு பிள்ளைகளின் டீன் ஏஜ் காதலை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடிவதில்லை. டீன் ஏஜில் காதலில் விழும் பிள்ளைகளை எப்படிச் சமாளிப்பது?
டீன் ஏஜில் காதலில் சிக்கும் உங்கள் மகளுக்கோ, மகனுக்கோ காதலைவிடவும் உங்களின் ஆதரவும் ஆலோசனையுமே பெரிதாகத் தேவைப்படும். ஆனால் பல பெற்றோர்களும் அதை உணர்வதே இல்லை.
உங்கள் டீன் ஏஜ் பிள்ளைகள் காதலிப்பது தெரிந்தால் நீங்கள் செய்யவேண்டிய அடிப்படையான 3 விஷயங்கள் இவை….
1. ஏற்றுக்கொள்ளுங்கள்
பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். அவர்கள் ஏதோ கொலைக்குற்றமே செய்துவிட்டதுபோல ரியாக்ட் செய்யாதீர்கள். அவர்களது காதலே தவறானது என மறுக்காதீர்கள்.
2. புரிந்துகொள்ளுங்கள்
அந்த வயதில் அத்தகைய உணர்வுகளும் அதன் தொடர்ச்சியாக மலரும் காதலும் இயல்பானதே என புரிந்துகொள்ளுங்கள்.
3. பேசுங்கள்
காதல் என்றால் என்ன, உறவு என்றால் என்ன என உங்கள் பிள்ளைகளிடம் விளக்கமாக, மனம் விட்டுப் பேசுங்கள்.
டீன் ஏஜ் காதல் ஏன் நல்லது?
அந்த வயதில் காதல் வயப்படும் ஆண்களும் பெண்களும் சுயமதிப்பையும் சுதந்திரத்தையும் உணர்வார்கள். அவர்களுக்கு பொறுப்புணர்வு கூடும்.
டீன் ஏஜில் ஏன் காதலில் விழுகிறார்கள்?
பதின்ம வயதில் எதிர்ப்பாலினத்தாருடன் நெருக்கமாகும்போது, அந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ குழந்தைப்பருவத்தில் தன் தாய்க்கும் தனக்குமிருந்த இணக்கம் மற்றும் அன்பின் பிரதிபலிப்பு ஏற்படும். வயது முதிர்ந்த பின் வரும் காதலைவிடவும் டீன் ஏஜ் காதலில் நெருக்கம் அதிகமிருக்கும். ஆனால் இப்படி இளவயதிலேயே மலரும் காதல் பெரும்பாலும் அதே வேகத்தில் முடிந்துபோவதும் சகஜம்.
மூளையை பாதிக்குமா டீன் ஏஜ் காதல்?
டீன் ஏஜில் ஏற்படும் காதல் உணர்வால் மகிழ்ச்சிக்கு காரணமான டோபமைன் ஹார்மோன் அதிகம் சுரக்கும். அதை மூளை விரும்புகிறது. அதாவது போதையால் ஏற்படும் ஒருவித பரவசநிலைக்கு இணையானதாக இந்த உணர்வை அனுபவிக்கிறார்கள் டீன் ஏஜ் காதலர்கள்.
பெற்றோருக்கு 15 டிப்ஸ்
கடுமையான தண்டனைகளைத் தவிருங்கள்.
பிள்ளைகளை பலதரப்பட்ட நண்பர்களுடனும் பழக ஊக்கப்படுத்துங்கள்.
டீன் ஏஜ் பிள்ளைகளிடம் காதல், இனக்கவர்ச்சி, உடல் ஈர்ப்பு போன்றவற்றுக்கான வித்தியாசங்களை விளக்கிச் சொல்லுங்கள்.
உங்களுடைய டீன் ஏஜ் மகன் அல்லது மகளின் நட்பு வட்டத்தைத் தெரிந்து வைத்திருங்கள்.
டீன் ஏஜுக்கான நடத்தை விதிகளை வலியுறுத்திச் சொல்லுங்கள்.
நண்பர்களுடன் வெளியிடங்களுக்குச் செல்லும்போது பின்பற்ற வேண்டிய விதிகளை மீண்டும் மீண்டும் வலியுறுத்துங்கள்.
அந்த விதிகளை மீறுவதால் சந்திக்கக்கூடிய விளைவுகளையும் அழுத்தமாகச் சொல்லிப் புரியவையுங்கள்.
யாரோ ஒரு குறிப்பிட்ட நண்பனுடன் அல்லது தோழியுடன் உங்கள் மகளையோ, மகனையோ பார்க்க நேர்ந்தால் அது குறித்து அவர்களிடம் விசாரியுங்கள்.
உங்கள் டீன் ஏஜ் பிள்ளையை ஏதேனும் ஒரு கலை அல்லது பொழுதுபோக்கில் ஈடுபட அறிவுறுத்துங்கள்.
உங்கள் டீன் ஏஜ் பிள்ளையுடன் நம்பகமான உறவைக் கடைப்பிடியுங்கள்.
எதிர்பாராத சம்பவங்களை எதிர்கொள்ள பிள்ளைகளைப் பழக்குங்கள்.
உங்கள் பிள்ளைகளின் நண்பர்களில் யாராவது காதலிப்பது தெரிந்தால் அவர்களை விமர்சனம் செய்யாதீர்கள்.
சுயமதிப்பின் முக்கியத்துவத்தைப் பிள்ளைகளுக்குப் புரியவையுங்கள்.
பிள்ளைகள் சிறு சிறு தவறுகள் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்புக்குப் பழகுங்கள்.
உங்களுடைய சித்தாந்தங்கள் பிள்ளைகளிடம் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் எப்படிப்பட்டது என்பதை உணர்ந்திருங்கள்.
டேக் ஹோம் மெசேஜ்
டீன் ஏஜில் குழந்தைகளின் நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றங்கள் இயல்பானவையே. காதல் என்ற அனுபவத்தின் மூலம் உங்கள் பிள்ளைகள் ஒருவித சுய தேடலில் ஈடுபடுவதைப் புரிந்துகொள்ளுங்கள். அந்தத் தேடலைப் புரியவைத்து உதவ வேண்டியது பெற்றோரின் கடமை.
டீன் ஏஜ் பிள்ளைகளை வளர்ப்பதுதான் வாழ்க்கையின் மிகப்பெரிய சவால் என்பது போன்ற முடிவுக்கு வந்து அதே கண்ணோட்டத்துடன் அவர்களைப் பார்க்காதீர்கள். டீன் ஏஜ் என்பதுதான் பிள்ளைகளுக்கு பெற்றோரின் அதிகபட்ச ஆதரவும் அரவணைப்பும் தேவைப்படுகிற பருவம் என்றுணர்ந்து அதற்கு உதவுங்கள், அவர்களை வழிநடத்துங்கள்.
ஆஷ்லி
டீன் ஏஜில் அடியெடுத்து வைத்ததுமே எங்களைப் போன்றோரின் பேச்சு ஆண்-பெண் நட்பு, காதல் பற்றியதாக இருக்கும், அந்த உரையாடல் உங்களுக்கு ஒருவித த்ரில்லை கொடுப்பதும், விதிகளை மீறவைப்பதுமாக இருக்கிறது.
காதலில் விழுந்துவிடக்கூடாது…. யாருடனும் நெருங்கிவிடக்கூடாது என்பதே பிள்ளைகளின் மீதான பெரும்பாலான பெற்றோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதைத் தவிர்த்து பிள்ளைகள் தங்கள் நட்பு மற்றும் உறவு குறித்து பெற்றோரிடம் மனம்திறந்து பேசும் சுதந்திரத்தைக் கொடுக்க வேண்டியதுதான் முக்கியம்.
உங்கள் மகன் அல்லது மகளின் நண்பர்களில் யாரோ காதலிப்பது தெரிந்தால், அது குறித்து உங்கள் பிள்ளைகள் எப்படி ஃபீல் செய்கிறாகள் என்று பக்குவமாகப் பேசிப் பாருங்கள். அது உங்கள் மீதான நம்பிக்கையை உங்கள் பிள்ளைகளுக்கு அதிகரிக்கும்.
பெரும்பாலான பெற்றோர் இத்தகைய சூழல்களை கத்திக் கூச்சல்போட்டோ, சண்டையாக மாற்றுகிறார்கள், செல்போனை பிடுங்குகிறார்கள், பெற்றோரின் இத்தகைய நடவடிக்கை, பிள்ளைகளை வேறு மாதிரி யோசிக்கவைக்கும். பெற்றோரின் அணுகுமுறை தங்கள் சந்தோஷத்தைக் குலைப்பதாகக் கருதி, தங்கள் காதலை அல்லது உறவைத் தொடரவே நினைப்பார்கள்.
எங்கள் வயதில் யாரும் இப்படிப்பட்ட அணுகுமுறையை விரும்புவதில்லை. எங்களுக்குத் தேவை அன்பான, அக்கறையான உரையாடல்களும் வழிகாட்டல்களும்தான். அந்த அணுகுமுறைதான் எங்களை மாற்றும்.
– ஹேப்பி பேரன்ட்டீனிங்