காவிரி விவகாரத்தில் ஆரம்பம் முதல் தடையாக இருப்பது கர்நாடகா அரசே என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்ட திமுக சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித் துறை அமைச்சர் எவ.வேலு மற்றும் எம்பி. ஆ.ராசா ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது…
காவிரி விவகாரத்தில் தமிழக அரசு தடையாக இருப்பதாக கர்நாடக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தடையாக இருப்பது தமிழகம் அல்ல.. கர்நாடக அரசு தான். முதலில் ஒப்பந்தம் முடிந்து விட்டது என தடை போட்டது கர்நாடக அரசு. பின்னர் தீர்ப்பாயம் வேண்டும் என்று கேட்டபோது அதை தடுத்து வந்ததும் கர்நாடக அரசு.
தீர்ப்பாயம் வந்த பிறகு அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்ததும் கர்நாடக அரசு. தீர்ப்பாயம் வந்த பிறகு அரசாணை போட்ட பிறகும் 3, 4 ஆண்டு காவிரி நீர் மேலாண்மை குழுவுக்கு தலைவரை நியமிக்காமல் தடுத்ததும் கர்நாடக அரசு.
காவிரி வரலாற்றில் ஒவ்வொரு அங்குலமாக எதிர்த்தது கர்நாடக அரசு. அவர் தமிழகத்தை குற்றம் சொல்வது பெருமை அல்ல. முதல்வரின் கருத்து சரியல்ல. காவிரி வரலாறு குறித்து கர்நாடக முதல்வருக்கு தெரியவில்லை.
முதலமைச்சர் எழுதிய கடிதத்தை மத்திய அரசு ஏற்காது என்கிறார். மத்தியிலும் பாஜக, கர்நாடகாவிலும் பாஜக. .நாங்கள் சொல்வதை தான் மத்திய அரசு கேட்கும் என மறைமுகமாக கர்நாடக முதல்வர் கூறுகிறார்.
15 கூட்டங்கள் நடந்தது. அதில், தமிழக அரசு பங்கேற்கவில்லை என கர்நாடக முதல்வர் கூறியுள்ளார். 9 கூட்டங்களில் நாங்கள் கலந்து கொண்டுள்ளோம். சில கூட்டங்களை அவர்களே ரத்து செய்துள்ளார்கள். நாங்கள் கலந்து கொள்ளவில்லை என சொல்வது அப்பட்ட பொய்.
முதலமைச்சர் தவறான செய்தியை தருகிறார். நான் இதற்கு வருத்தப்படுகிறேன். ஒரு முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதுவது சட்டவிரோதமா? மேகதாது அணை கட்டக்கூடாது என சொல்வது சட்ட விரோதமா?
இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு முதல்வருக்கு தெரியவில்லை. எங்களுடைய தலைவர் கடிதத்தை ஸ்டண்ட் என்று சொல்கிறார். அவர் தான் தேர்தலுக்காக ஸ்டண்ட் அடிக்கிறார் என்று சொல்ல எனக்கு ரொம்ப நேரம் ஆகாது. என் தலைவரை டச் பண்ணிட்டால், இது திமுக ஜல்லிக்கட்டு மாடு சும்மா விடாது என்று பேசினார்.
தொடர்ந்து, சனாதன விவாகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,
மண்ணின் பெருமை தெரியாமல் ஆளுநர் பேசியிருக்கிறார். சனாதனத்திற்கு சாவு மணி அடித்தது இந்த மண். அதை மீண்டும் உயிர்பிக்க முடியாது. ஆளுநர் அல்ல எந்த கொம்பனாலும் முடியாது என காட்டமான பதிலை தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM