திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் முன்னாள் டீன் வனிதா கடந்த மாதம் ஓய்வு பெற்றதை தொடர்ந்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் புதிய டீனாக மருத்துவர் நேரு பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,
திருச்சி அரசு மருத்துவமனையில் 1603 படுக்கைகள் உள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறியவர்களுக்கு 20, பெரியவர்களுக்கு 75 என மொத்தம் 95 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. தற்போது திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் திருநங்கைகளுக்கு என 10 படுக்கையுடன் கூடிய வார்டும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் திருநங்கைகளுக்கு பொதுப் படையான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை செய்ய சிறந்த நரம்பியல் நிபுணர்கள் பணியில் அமர்த்தப் பட்டுள்ளனர். திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அதி நவீன கருவிகள் மூலம் சிறந்த மருத்துவர்களை கொண்டு அறுவை சிகிச்சைகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கொரோனா நோய் தொற்றுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை 6 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. அதில் 3 பேர் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் பெறப்பட்ட சிறுநீரகம், 3 பேர் தானமாக வழங்கிய சிறுநீரகம் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அரசு திட்டங்கள் குறிப்பாக மகத்தான மருத்துவமனை, மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்டங்கள் மக்களை சென்றடையும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் மருத்துவமனைக்கு ஒதுக்கப்படும் நிதியை கொண்டு அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நோயாளிகள் மற்றும் உடன் தங்கியிருப்பவர்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்கப்படும். மருத்துவமனை வளாகத்தில் இயங்காமல் இருக்கும் 3 லிப்டுகள் உடனே சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அரசு மருத்துவ மனையின் நெடுநாள் கனவாக புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சை கருவியை தமிழக அரசின் துணையோடு திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்வேன்.
நான் ஏற்கனவே இதே மருத்துவமனையில் பணியாற்றினேன். என்னுடன் பணியாற்றியவர்கள் தற்போதும் பணியில் உள்ளனர். இதனால் ஒருங்கிணைந்து மக்கள் சேவையை சிறப்பாக ஈடுபடமுடியும். மருத்துவ சேவை என்பது மிகவும் உயர்வானது. நோயாளிகளை மிகவும் மதித்து நடக்க வேண்டும் என்று அனைத்து டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுறுத்தப்படும்.
திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு செவிலியர்கள் பற்றாக்குறை குறித்து தமிழக மருத்துவ இயக்குனரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என கூறினார்.
க.சண்முகவடிவேல்