திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நெடுமங்காடு பகுதியை சேர்ந்தவர் சித்திக். இவரது மனைவி சஜினா. இவர்களுக்கு நைமா பாத்திமா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை உள்பட 3 மகள்கள் உள்ளனர். நேற்று மாலை நைமா பாத்திமா, வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது நைமாவை காணவில்லை. அதிர்ச்சியடைந்த சஜினா தேடினார். தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த வாளியில் நைமா தலைகீழாக விழுந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறினார். உடனே குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பரிசோதித்த டாக்டர்கள், நைமா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். அதைத்தொடர்ந்து குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுபற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.