“நமது சிவாஜி தி பாஸை சந்தித்ததில் மகிழ்ச்சி” – இயக்குநர் ஷங்கர் எனர்ஜி ட்வீட்

‘சிவாஜி’ படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, இயக்குநர் சங்கர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து பேசிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஸ்ரேயா சரண், மறைந்த நடிகர் விவேக், சுமன், மணிவண்ணன், வடிவுக்கரசி, சாலமன் பாப்பையா, பட்டிமன்றம் ராஜா, கொச்சின் ஹனீபா, பிரமிட் நடராஜன், லிவிங்ஸ்டன், எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் பலரின் நடிப்பில் உருவானப் படம் ‘சிவாஜி’. 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், கடந்த 2007-ம் ஆண்டு, ஜுன் மாதம் 15-ம் தேதி இந்தியாவிலும், அதற்கு ஒருநாள் முன்னதாக வெளிநாடுகளிலும் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்றது.

அதிலும், சிங்கம் சிங்கிளாதான் வரும், சிங்கப் பாதை, ஒரு ரூபாய் உள்ளிட்ட பஞ்ச் வசனங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. உயர் அதிகாரிகளை கைக்குள் வைத்துக்கொள்ளும் அரசியல்வாதியாகவும், தொழிலதிபராகவும் தெலுங்கு நடிகரான சுமன் படத்தில் மிரட்டியிருப்பார். வாலி, வைரமுத்து, நா.முத்துகுமார், பா.விஜய் ஆகியோரின் பாடல் வரிகளில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், தோட்டாதரணியின் கலை இயக்கத்தில், கே.வி. ஆனந்தின் ஒளிப்பதிவில் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.

image

இந்தப் படம் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டானதால், இயக்குநர் சங்கர், நடிகர் ரஜினிகாந்த் ஆகிய இருவருக்குமே ‘எந்திரன்’ படத்திற்கான கூட்டணியை உருவாக்கியது என்றே சொல்லலாம். இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி 15 வருடங்கள் ஆனதையொட்டி, இயக்குநர் சங்கர், நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்துள்ளார். அப்போது அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து நமது சிவாஜி தலைவரை சந்தித்ததில் மகிழ்ச்சி என்றும், உங்களின் ஆற்றல், பாசம், நேர்மறையான ஆரா எனது நாளை மிகச் சிறந்த நாளாக ஆக்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.