நள்ளிரவில், முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், மணிகண்டன், ஆர்.பி உதயகுமார், வைத்தியலிங்கம் ஆகியோர் திடீரென ஓ.பி.எஸ். வீட்டுக்கு படையெடுத்த நிகழ்வு, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக செயற்குழு, பொதுக் குழுக் கூட்டம் ஜூன் 23-ஆம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தை நடத்துவது தொடா்பாக, ஆலோசனைக் கூட்டம் செவ்வாய் கிழமை (ஜூன்;14) நடைபெற்றது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டச் செயலாளா்கள், தலைமை நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி. பழனிசாமி ஆகயோர் தலைமை வகித்தனா். கூட்டம் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.
மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அதிமுக அலுவலகத்துக்கு வெளியில் திரண்டிருந்த தொண்டர்களில் ஒரு தரப்பினா் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என முழக்கமிட்டனா். மற்றோரு தரப்பினர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையேற்க வேண்டும் என முழக்கமிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
இந்நிலையில், கூட்டத்துக்குப் பிறகு முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமார் செய்தியாளா்களிடம் கூறுகையில்: அதிமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலானோர் கட்சிக்கு ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்று வலியுறுத்தினா். அதிமுகவின் தொண்டா்களும், நிர்வாகிகளும் எதிர்பார்ப்பது ஒற்றைத் தலைமைதான். ஆனால், அந்த ஒற்றைத் தலைமை யார் என்பதை கட்சிதான் முடிவு செய்யும். பொதுக்குழுவில் இது தொடா்பாக விவாதிக்கப்படும் என்றார்.
இந்த சூழலில், செவ்வாய் கிழமை நள்ளிரவில், முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், மணிகண்டன், ஆர்.பி உதயகுமார், வைத்தியலிங்கம் ஆகியோர் திடீரென ஓ.பி.எஸ். வீட்டுக்கு அதிமுக-வினர் படையெடுத்த நிகழ்வு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறுகையில்; ஒற்றைத் தலைமை பற்றி நாங்கள் பேசவில்லை. வேறு சில விஷயங்கள் தொடர்பாக தான் ஆலோசனை நடத்தினோம். கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த அதிமுக ஆலோசனை கூட்டத்தில், கட்சி தலைமை யார் என்பது குறித்து அவரவர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். எங்களுடைய கருத்து எல்லாம், கட்சி வலிமையாக இருக்க வேண்டும். ஜெயலலிதா விருப்பப்படி, அதிமுக நூறாண்டு காலம் நிலைத்திருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என கூறினார்.
இரட்டைத் தலைமையுடன் இவ்வளவு நாட்கள் சுமூகமாக சென்று கொண்டிருந்த அதிமுக கட்சிக்குள் இப்போது, ஒற்றைத் தலைமை என்ற கோரிக்கை, வெடிக்கத் துவங்கி உள்ளது. அந்த ஒற்றை தலைமை ஓ.பன்னீர்செல்வமா அல்லது எடப்பாடி பழனிசாமியா என்பது தான் இப்போது அதிமுக தொண்டர்களின் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“