மும்பை: கூட்டணியிலிருந்து விலகிய நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரே மேடையில் பிரதமர் நரேந்திர மோடியும், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவும் தோன்றி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார். மகாராஷ்டிர அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், முதல்வர் உத்தவ் தாக்கரேவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரே மேடையில் கலந்துகொண்டனர்.
முன்னதாக மும்பைக்கு அருகிலுள்ள கடற்படை தளமான ஐஎன்எஸ் ஷிக்ராவில் உள்ள கொலபா ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை, முதல்வர் உத்தவ் வரவேற்றார்.
பின்னர் பிரதமரும், முதல்வரும் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அப்போது ஒரே மேடையில் இருவரும் அருகருகே அமர்ந்திருந்தனர்.
அங்கு ஜல்பூஷண் கட்டிடத்தையும், சுதந்திரப் போராட்ட வீரர்கள், புரட்சியாளர்கள் தொடர்பான கேலரியையும் பிரதமர் திறந்துவைத்தார்.
பின்னர் விழாவில் முதல்வர் உத்தவ் பேசியதாவது: சுதந்திரப் போராட்ட வீரர்கள், புரட்சியாளர்களின் கேலரியை பிரதமர் மோடி திறந்து வைத்திருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. நமது சுதந்திரப் போராட்டக் கதைகளை உயிர்ப்புடன் வைத்திருப்பது நமது கடமையாகும். அந்த நேரத்தில் அப்போது என்ன நடந்தது என்பதை நமது வருங்கால சந்ததியினருக்கு எடுத்துரைக்க அது கருவியாக இருக்கும். நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய மையமாக இந்த காட்சியகம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து பாந்த்ரா குர்லா வளாகத்தில் (பிகேசி) நடைபெற்ற திவிசதாப்தி மகோத் சவத்திலும் பிரதமர் மோடி, முதல்வர் உத்தவ் ஆகியோர் கலந்துகொண்டனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரே மேடையில் பிரதமரும், முதல்வர் உத்தவும் கலந்துகொண்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.