புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் 3வது நாளாக மீண்டும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆஜராகி உள்ளார். நிதி நெருக்கடியில் சிக்கிய நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் அவரது மகன் ராகுல் காந்தியும் தொடங்கிய யங் இந்தியா நிறுவனம் கையகப்படுத்தியதில் பண மோசடி நடந்து இருப்பதாக தனி நபர் கூறிய குற்றச் சாட்டு குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இது தொடர்பாக ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அவர்கள் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை ஏற்று நேற்று முன்தினம் ஆஜரான ராகுல் காந்தியிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.2வது நாளாக நேற்றும் அமலாக்கத்துறையினர் அவரிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணையை முடித்து கொள்ளுமாறு ராகுல் காந்தி கோரியதை ஏற்க மறுத்த அதிகாரிகள், இன்றும் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பினர். அதன்படி, ராகுல் காந்தி மீண்டும் அமலாக்கத்துறை முன்பு ஆஜராகி உள்ளார். இதனால் அவரை கைது செய்ய அமலாக்கத்துறை திட்டமிடுகிறதா என்ற கேள்வி காங்கிரஸ் தொண்டர்கள் இடையே எழுந்துள்ளது. இதற்கிடையே பாஜக தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி தனியார் சேனலில் நடந்த விவாத நிகழ்ச்யில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில் “ நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்குத் தொடர்பாக அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு ராகுல் காந்தி ஆஜராகிவருகிறார். அவரை அமலாக்கப்பிரிவு கைது செய்யக்கூடும் என்று நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.