நேஷனல் ஹெரால்டு வழக்கில் 2வது நாளாக ராகுலிடம் 10 மணி நேரம் விசாரணை; இன்று மீண்டும் ஆஜராக சம்மன்

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் இரண்டாவது நாளான நேற்று ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை 10 மணி நேரம் விசாரணை நடத்தியது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் விசாரணை நடத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு கடந்த 1ம் தேதி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி, ராகுல் காந்தி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஆஜரானார். அவரிடம் சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், நேற்று மீண்டும் ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டது. அமலாக்கத்துறையை கண்டித்து காங்கிரசார் நாடு முழுவதும் சத்தியாகிரக போராட்டம் நடத்தினர். இதில் பலர் கைது செய்யப்பட்டனர். டெல்லி போலீசார் மூர்க்கத்தனமாக தள்ளியதால் மூத்த தலைவர் ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் டெல்லியில் பரபரப்பான சூழல் நிலவியது. இதைத் தொடர்ந்து, நேற்று காலை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராவதற்கு முன்பாக, காலை 9 மணியளவில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்ற ராகுல் காந்தி அங்கு மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், ஆர்பாட்டத்தின்போது போலீசாரால் தாக்கப்பட்ட தொண்டர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சுமார் 11 மணிக்கு கார் மூலம் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு ராகுல் காந்தி புறப்பட்டார். அவருடன் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் உட்பட மூத்த தலைவர்கள் பேரணியாக சென்றனர். தடையை மீறி பேரணியாக சென்ற கே.சி.வேணுகோபால், ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, தமிழக எம்பிக்கள் மாணிக்கம்  தாக்கூர், திருநாவுக்கரசர், ஜோதிமணி மற்றும் தொண்டர்களை டெல்லி போலீசார் கைது செய்து தெற்கு டெல்லியில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். ராகுல் காலை 11.15 மணியளவில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். இதற்கு ராகுல் அளித்த பதிலை வாக்குமூலமாக பதிவு செய்தனர். சுமார் 4 மணி நேரம் விசாரணைக்கு பின் மாலை 3.30 மணிக்கு ராகுல் வெளியே வந்தார். பின்னர், உணவு இடைவெளிக்காக வீட்டிற்கு சென்ற ராகுல், மதிய உணவுக்கு பின் மீண்டும் 4.35 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். இரவு 9.30 மணியளவில் விசாரணை முடிந்து ராகுல் வெளியே வந்தார். 2வது நாளில் ராகுலிடம் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடந்தது. இன்று மீண்டும் ஆஜராக அவருக்கு சம்மன்  வழங்கப்பட்டுள்ளது. இதனால், ராகுல் இன்று மீண்டும் ஆஜராகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.