படிக்காதவன்: சென்ட்டிமென்ட் – ஆக்ஷன் காம்போவில் கலக்கிய ரஜினி; டாக்ஸிக்கும் உயிர்கொடுத்த இயக்குநர்!

80 & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – ‘படிக்காதவன்’

இந்தத் தொடரின் முந்தைய கட்டுரைகளை இங்கே படிக்கலாம்.

டென்ட் கொட்டாய் டைரீஸ் – 80s, 90s Cinemas For 2K Kids

11, நவம்பர் 1985 அன்று வெளியான ‘படிக்காதவன்’ திரைப்படம், ரஜினிகாந்தின் சினிமாப் பயணத்தில் வசூலை வாரிக்குவித்த சூப்பர்ஹிட் திரைப்படங்களுள் ஒன்றாக அமைந்தது. திரைப்படங்களில் தன்னை அடித்தட்டு மக்களில் ஒருவனாக சித்திரித்துக் கொள்வது ரஜினியின் பாணிகளுள் ஒன்று. அவருடைய படங்களின் தலைப்புகள் கூட ‘படிக்காதவன்’, ‘வேலைக்காரன்’, ‘உழைப்பாளி, ‘ஊர்க்காவலன்’ என்பது போல் அமைந்திருக்கும். இது எம்.ஜி.ஆரின் ஃபார்முலா.

தமிழகத்திலுள்ள சினிமாப் பார்வையாளர்களின் பெரும்பாலான சதவிகிதம் அடித்தட்டு மக்கள் என்பதால் அவர்களுடன் தங்களை நெருக்கமாக சித்திரித்துக் கொள்ள சினிமா ஹீரோக்கள் மிகவும் ஆர்வம் காட்டினார்கள். இதற்காகத் திரையில் ரிக்ஷா இழுத்தார்கள்; கூலிக்காரனாக மாறினார்கள்; பணக்காரர்களால் ஏமாற்றப்பட்டு அதனால் கோபப்படுவர்களாக, துயரப்படுபவர்களாக தங்களைக் காட்டிக் கொண்டார்கள். இவற்றில் கல்வி கற்காத நிலையும் ஒன்று. படிக்காதவன் நேர்மையாளனாக, நல்லவனாக இருப்பான். ஆனால் படித்த பணக்காரன் என்பவன் தீமைகளைச் செய்பவனாக இருப்பான். இப்படியான சித்திரிப்பு அடித்தட்டு மக்களுக்குப் பிடித்திருந்தது. இந்த ஹீரோக்களைத் தங்களில் ஒருவனாகப் பார்த்தார்கள்; சினிமாவில் வெற்றியடைய வைத்தார்கள்.

படிக்காதவன்

அமிதாப்பின் ரீமேக்குகளில் ரஜினி

‘Angry Young Man’ என்கிற அமிதாப் பச்சனுக்குக் கச்சிதமாகப் பொருந்திய பிம்பத்தை தமிழுக்கு வெற்றிகரமாகக் கடத்திக் கொண்டு வந்தார் ரஜினிகாந்த். எனவே அமிதாப்பின் பல திரைப்படங்கள், ரஜினியை ஹீரோவாகக் கொண்டு தமிழில் ரீமேக் செய்யப்பட்டன. ‘படிக்காதவன்’ திரைப்படமும் அதில் ஒன்று. ‘Khud-Daar’ என்பதுதான் இந்திப் படத்தின் தலைப்பு. ஷோபன் பாபுவை ஹீரோவாகக் கொண்டு ‘டிரைவர் பாபு’ என்கிற தலைப்பில் தெலுங்கிலும் ரீமேக் ஆனது.

‘படிக்காதவன்’ திரைப்படத்தின் அடிப்படையான கதை என்பது இந்தியச் சினிமாவிற்கு மிகவும் பழகிப் போனதொரு சம்பிரதாயமான வடிவம். சந்தர்ப்ப சூழல் காரணமாக குடும்ப உறுப்பினர்கள் பிரிந்து சில பல பிரச்னைகளுக்குப் பிறகு கடைசியில் இணைவார்கள். ‘படிக்காதவன்’ திரைப்படமும் இந்த டெம்ப்ளேட்டில் இருக்கிற ஒன்றுதான். ஆனால் ஒரு இயக்குநர் கதையை சுவாரஸ்யமாக விவரிக்கும் விதத்தில்தான் அந்தத் திரைப்படம் ‘ஹிட்’ஆகிறது. ரஜினிக்குப் பல வெற்றித் திரைப்படங்களைத் தந்த ராஜசேகர்தான் இந்தத் திரைப்படத்தையும் சுவாரஸ்யம் குன்றாமல் இயக்கியிருந்தார்.

வக்கீலான சிவாஜி, தன் இரண்டு தம்பிகளின் மீது உயிரையே வைத்திருப்பார். சிவாஜியின் தோற்றத்திற்கும் சிறுவர்களுக்கும் இடையே வயது வித்தியாசம் அதிகம் என்பதால், இரண்டாம் தாரத்தின் பிள்ளைகள் என்பது போல ஒரு பாயின்ட்டை சாமர்த்தியமாக இணைத்திருப்பார்கள். சமையல் உள்ளிட்ட விஷயங்கள் சிரமமாக இருப்பதால் திருமணம் செய்து கொள்வார் சிவாஜி. ஆனால் வந்த அண்ணியோ, இரண்டு தம்பிகளையும் கடுமையாகத் திட்டி வீட்டை விட்டு துரத்திவிடுவார். பிரிந்த சகோதரர்கள் கடைசியில் இணைந்தார்களா என்பதுதான் ‘படிக்காதவன்’ கதை.

தான் படிக்காவிட்டாலும் தனது தம்பியை சிரமப்பட்டு படிக்க வைத்து ஆளாக்கி, பின்பு அவனாலேயே அவமானப்படுவதை ‘ஆறிலிருந்து அறுபது வரை’ போன்ற முந்தைய திரைப்படங்களில் ரஜினி ஏற்கெனவே செய்து விட்டார். என்றாலும் ‘படிக்காதவனில்’ இது சலிக்கவில்லை. அந்த அளவிற்கு சென்டிமென்ட் திறமையாகக் கலக்கப்பட்டிருந்தது. தம்பி ராமுவின் மீது பாசத்தை அள்ளிக் கொட்டும் அண்ணனாக ரஜினி சிறப்பாக நடித்திருந்தார். என்னவொன்று, அழுகைக் காட்சிகளில் மட்டும் எம்.ஜி.ஆர் மாதிரியே முகத்தை மூடி சமாளித்து விடுவார்.

படிக்காதவன்

ராஜா என்கிற பாசமிகு அண்ணன்

தான் பசியாக இருந்தாலும் சுமை தூக்கி தம்பியின் பசியை ஆற்றுவது, அவனை ஆங்கிலப் பள்ளிக்கூடத்தில் படிக்க வைப்பது, கல்லூரியில் நடக்கும் கலைநிகழ்ச்சிக்காக ‘ஸ்டைலாக’கோட்டு அணிந்து கோணலான ஷூக்காலுடன் தடுமாறி நடந்து தம்பியின் நடிப்பைப் பார்த்து விசிலடிப்பது, ‘முதல் வகுப்பில் தேர்வாகி விட்டான்’ என்பதை அறிந்ததும் ஊரையே கூட்டி கொண்டாடுவது, ‘வீட்டோடு மாப்பிள்ளை’யாக தம்பி செல்வது பிடிக்காவிட்டாலும் அவனுடைய விருப்பத்திற்காக இறங்கி வருவது, ‘தேர்வில் பாஸாகவில்லை’ என்பதை பிறகு அறிந்ததும் கொதித்துப் போய் தம்பியின் சட்டையைப் பிடிப்பது, அவனால் ஆங்கிலத்தில் திட்டப்பட்டதும் ‘யெஸ்… யெஸ்…’ என்று கண்ணீருடன் தலையசைப்பது, குடிபோதையில் ‘ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்’ என்று அம்பிகாவின் தோளில் தாங்கி வேதனையைக் கொட்டுவது… என ஒரு பாசமிகு அண்ணனின் சித்திரத்தை விதம் விதமான காட்சிகளில் அட்டகாசமாக வெளிப்படுத்தியிருப்பார் ரஜினி.

இதைப் போலவே சிவாஜியிடம் ரஜினி இருக்கும் காட்சிகளை எல்லாம் கவனியுங்கள். ரஜினியின் முகத்தில் உண்மையான பணிவும் மரியாதையும் தெரியும். கதாபாத்திரத்தின் படி சிவாஜி என்கிற மூத்த அண்ணனின் மீது மரியாதையா அல்லது சிவாஜி என்கிற கலைஞனின் மீது கொண்ட மரியாதையா என்று பிரித்தறிய முடியாமல் இந்த உணர்வை தனது முகபாவங்களில் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார் ரஜினி.

ஹீரோவாக நடித்த காலத்திலேயே சக முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க சிவாஜி தயங்கியதில்லை. அந்தக் காலக்கட்டத்தைத் தாண்டியவுடன் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த இளைய நடிகர்களுடனும் இணைந்து நடித்தார் சிவாஜி. இதற்கு முன்பாக ரஜினியுடன் ‘ஜஸ்டிஸ் கோபிநாத்’, ‘நான் வாழ வைப்பேன்’ ஆகிய இரு திரைப்படங்களில் சிவாஜி இணைந்து நடித்திருந்தார். ‘படிக்காதவன்’ திரைப்படத்தில் சிவாஜிக்கான காட்சிகள் குறைவுதான் என்றாலும் ஒரு மூத்த அண்ணனின் பாசத்தை தனது அசாதாரண நடிப்பின் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தி விடுவார். ரஜினிதான் தனது தம்பி என்பது தெரியாத நிலையில், பார்த்த முதல் கணத்திலேயே இனம் புரியாத பாசம் உள்ளுக்குள் அலையாக எழும்புவதை தனது முகபாவத்தில் அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார். குற்றவாளி மற்றும் சாட்சிக்கூண்டுகளில் நிற்பவர்கள்தான், காணாமல் போன தனது இரண்டு தம்பிகள் என்பதை அறிந்து அதிர்ச்சியடைவதும் ரஜினியை விடுவிப்பதற்காக தானே வழக்கறிஞராக களத்தில் இறங்குவதும் சுவாரஸ்யமான காட்சிகள். (ஆனால் ஒரு நீதிபதி எப்படி வழக்கறிஞராக மாற முடியும்?! பதவியை ராஜினாமா செய்திருப்பாராக இருக்கும்!).

கடைசித் தம்பி ராமுவாக விஜய் பாபு நடித்திருந்தார். சரத்பாபு மாதிரி இம்மாதிரியான துரோகம் செய்யும் வேடங்களுக்கு என்றே சிலர் நேர்ந்து விடப்படுவார்கள். ஆந்திராவைச் சேர்ந்த விஜய்பாபு ‘ஒரு வீடு இரு உலகம்’ என்னும் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார். சில திரைப்படங்களில் நடித்த பிறகு தொலைக்காட்சிகளில் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

படிக்காதவன்

“லட்சுமி, மானத்தை வாங்காதே… ஸ்டார்ட் ஆயிடு!”

பொதுவாக இஸ்லாமிய பாத்திரம் என்றால் அவர்களைத் திரையில் பயங்கரவாதிகளாகவும் கடத்தல்காரர்களாகவும் சித்திரிப்பது பற்றி நிறைய விமர்சனங்கள் வந்துள்ளன. ஆனால் இதில் வரும் ஒரு இஸ்லாமிய பாத்திரத்தை நேர்மையாளராகவும் மற்றவர்களுக்கு உதவும் பரந்த உள்ளம் கொண்டவராகவும் காட்டியிருப்பது சிறப்பு. அண்ணியின் கொடுமை காரணமாக சென்னைக்கு ஓடி வந்து ரவுடிகளிடம் மாட்டிக் கொள்ளும் இரண்டு சிறுவர்களையும் தன் சொந்தப் பிள்ளைகளோடு இணைத்து வளர்க்கும் பாசக்கார முஸ்லிமாக நாகேஷ் நடித்திருந்தார்.

தம்பியின் திருமணச் செலவிற்காக டாக்ஸியை ரஜினி விற்றுவிடும் போது தன்னுடைய ஓய்வுக்காலப்பணத்தை வைத்து அதை மீட்டுக் கொண்டு வருவார் நாகேஷ். “இது ஃபரிதாவோட கல்யாணத்திற்காக வெச்சிருந்த பணமாச்சே?” என்று ரஜினி கண்ணீருடன் மறுக்கும் போது “அவளுக்குத்தான் அண்ணன் நீ இருக்கியே. அப்புறம் என்னப்பா எனக்கு கவலை?” என்று நாகேஷ் கேட்கும் காட்சி உருக்கமானது. எத்தனை மதஅரசியல் நுழைந்தாலும் இந்தியாவில் மதநல்லிணக்க உணர்வு மறைந்து போகாது என்பதை நிரூபிக்கும் காட்சிகள் இவை.

இந்தத் திரைப்படத்தில் ‘லட்சுமி’ என்று ஒரு முக்கியமான பாத்திரமும் அற்புதமாக நடித்திருக்கிறது. ஆம், ஓர் அஃறிணைப் பொருளை ஏறத்தாழ ஒரு உயிருள்ள பாத்திரமாக காட்டிய விதத்தில் காட்சிகளை சுவாரஸ்யமாக உருவாக்கியிருந்தார்கள். ரஜினி ஓட்டும் டாக்ஸியின் பெயர்தான் ‘லட்சுமி’. காரில் ஏறுகிறவர்கள் கடத்தல் பொருள்களை வைத்திருந்தால் லட்சுமி வாகனத்தை ஸ்டார்ட் செய்யாது. ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரியின் தொழில்நுட்பம் அந்தளவிற்கா வளர்ந்திருக்கிறது என்று லாஜிக் கேட்கக்கூடாது. அப்படியொரு சுவாரஸ்யமான சினிமாட்டிக் செட்அப் இது.

படிக்காதவன்

ஒரு கர்ப்பிணிப் பெண்ணிற்காக இரக்கப்பட்டு காரில் ஏற்றிக் கொள்வதும், வண்டி ஸ்டார்ட் ஆகாமல் அடம்பிடிப்பதும், மறுநாளே அந்தக் கர்ப்பிணி பெண் இயல்பான வயிற்றுடன் நடந்து செல்வதுமாக நகைச்சுவை காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இந்தக் காட்சிக்கோர்வைகள் மிகவும் ரசிக்கப்பட்டன. இந்தச் சாதாரண நகைச்சுவையை தனது பிரத்யேகமான நடிப்பால் சுவாரஸ்யமாக்கினார் ரஜினி.

‘இந்த உலகில் பாசத்தை விடவும் பணம்தான் முக்கியம்’ என்பதைப் புரிந்து கொள்கிற வெறுப்பின் கணத்தில் தீயவழியில் பணம் சம்பாதிப்பதற்காக மனம் பேதலித்து ரஜினி கிளம்புவதும், அந்தச் சமயத்தில் கார் ஸ்டார்ட் ஆகாமல் அவரைத் தடுக்க முயல்வதும், கோபத்தில் ‘லட்சுமி’யை அடிஅடியென்று ரஜினி அடித்து கண்ணாடிகளை உடைப்பதும் உருக்கமான காட்சிகள். ஒரு வாகனத்திற்கும் அதன் ஓட்டுநருக்கும் இருக்கக்கூடிய பிணைப்பை இந்தக் காட்சிகள் சிறப்பாக வெளிப்படுத்தின. இதைப் போலவே கடனைத் திருப்ப முடியாமல் சேட்டிடம் காரை விட்டு விட்டு ரஜினி வேதனையுடன் கிளம்பும் போது பேனட்டில் அவரது பேன்ட் மாட்டிக் கொள்கிற காட்சியில் ‘என்னை விட்டுட்டுப் போறியே?’ என்று கார் பரிதாபமாக கேட்பது மாதிரியான சென்டிமென்ட் வருவது சற்று ஓவர்தான் என்றாலும் காட்சிகளின் பின்னணியோடு பார்க்கிற போது உருக்கமாகவே இருக்கும்.

படிக்காதவன்

இந்தத் திரைப்படத்தின் ஹீரோயின் அம்பிகா. கள்ளச் சாராயம் விற்கும் இவர், கர்ப்பிணி வேஷத்தின் மூலம் ரஜினியை டிசைன் டிசைனாக ஏமாற்றுவதும், பின்பு ரஜினியின் அறிவுரையால் மனம் திருந்தி கூலி வேலை செய்து சம்பாதிப்பதும் சிறப்பான காட்சிகள். ‘தங்கச்சிய நாய் கடிச்சிருச்சுப்பா’ என்கிற ஜனகராஜின் காமெடி புகழ் பெற்றது. தள்ளுவண்டியில் வாழைப்பழ வியாபாரம் செய்யும் ஜனகராஜ், கபாலி என்கிற தன் பெயரை கே.பாலி என்று பந்தாவாக மாற்றிக் கொண்டு ரெண்டாம் நம்பர் பிசினஸ் செய்யக் கிளம்புவதும் பிறகு போலீஸில் மாட்டிக் கொண்டு சாலையில் கிழிந்த பனியனுடன் குப்பை அள்ளுவதும் சிரிப்பை வரவழைக்கும் காட்சிகள். தேங்காய் சீனிவாசன், பூர்ணம் விஸ்வநாதன், செந்தாமரை, ரம்யா கிருஷ்ணன், வடிவுக்கரசி ஆகியோர்களும் இதில் நடித்திருந்தார்கள். ஒரு காலத்தில் ஹீரோவாக இருந்த ஜெய்சங்கர், வில்லன் பாத்திரத்தை முதன் முதலில் ஏற்றதே ரஜினியின் படத்தில்தான் (முரட்டுக்காளை). இதிலும் மறைமுகமான வில்லனாக வந்து கிளைமாக்ஸில் கார் சேஸிங் எல்லாம் செய்து ரஜினியிடம் உதை வாங்குவார்.

இளையராஜாவின் இசை ராஜாங்கம்

இதன் பாடல்களைப் பற்றி என்ன சொல்ல?! எண்பதுகளில் வெளிவந்த பல திரைப்படங்களின் இசையை இன்றளவும் நினைவுகூரக்கூடிய இனிமையான தருணங்களாக மாற்றியிருந்தார் இளையராஜா. ‘படிக்காதவன்’ திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களும் இனிமையானவை. ‘ராஜாவுக்கு ராஜா நான்டா’, ‘சொல்லி அடிப்பேனடி’ என்கிற ஹீரோவின் பெருமையை சொல்லும் இரண்டு பாடல்களும் அட்டகாசமான மெட்டு மற்றும் இசைக்கோர்வைகளுடன் இருக்கும். ‘சோடிக்கிளி எங்க சொல்லு…’ என்கிற பாடல் இனிமையாக இருப்பதோடு வண்ணமயமான பின்னணிகளில் படமாக்கப்பட்டிருக்கும். ‘ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்’ என்கிற தத்துவப் பாடல் இன்றளவும் ஆத்மார்த்தமாக ரசிக்க வைக்கக்கூடியது. ‘ஒரு கூட்டுக்கிளியாக’ என்கிற பாடலை படத்தின் பல இடங்களில் உருக்கமான முறையில் பயன்படுத்தியிருப்பார் இயக்குநர்.

படிக்காதவன்

ரஜினி – சென்ட்டிமென்ட், ஆக்ஷன் ஹீரோ

‘ராஜாவுக்கு ராஜா நான்டா’ பாடலில் டாக்ஸி கட்டடங்களின் மேலும் கடலின் மீதும் பயணப்படுவது மாதிரியான தந்திரக்காட்சிகளை உருவாக்கியிருப்பார்கள். (அந்தக் காலத்து கிராஃபிக்ஸ்). ஜூடோ ரத்னம் மற்றும் பப்பு வர்மா ஆகிய இரண்டு ஸ்டன்ட் மாஸ்டர்களின் கைவண்ணத்தில் ‘அபுஹாய்… அபுஹாய்’ என்கிற பின்னணி ஒலியுடன் சண்டைக்காட்சிகள் சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தன. ராஜசேகரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் வி.ரங்கா மிக நோ்த்தியாக காட்சிகளை அமைத்திருப்பார். கிளைமாக்ஸில் வரும் கார் சேஸிங் காட்சி அநாவசியமானதுதான் என்றாலும் அதில் ஒளிப்பதிவு பணி பிரமிக்கத்தக்க வகையில் இருக்கும்.

‘படிக்காதவன்’ திரைப்படத்தில் மன்சூர் அலிகானும் நடித்திருக்கிறார் என்றால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். ஆம், தன் தம்பி தோ்வில் பாஸாகவில்லை என்பதை அறிந்து கோபத்துடன் கிளம்பும் ரஜினி, நடனமாடிக் கொண்டிருக்கும் தம்பியை நிறுத்தி கேள்விகள் கேட்பார். அப்போது சற்று கவனமாகப் பார்த்தால், பின்னணியில் நிற்பவர்களில் ஒருவரின் முகம் உங்களுக்கு பரிச்சயமாகத் தெரியும். அது மன்சூர் அலிகான். (இந்த அரிய வகை கண்டுபிடிப்பெல்லாம் பெருமையா?! கடமை!).

தனது சகோதரர்களுக்காக உழைத்து தியாகம் செய்யும் பாத்திரம் என்பது ரஜினிக்கு புதியதல்லதான் என்றாலும் ‘படிக்காதவன்’ திரைப்படத்தில் வரும் ‘ராஜா’ என்கிற பாத்திரம் இன்றளவும் மறக்கக்கூடியதல்ல. யாராவது ஒரு அண்ணன் பேருந்து நிலையத்தில் தன் தம்பியை வழியனுப்பி வைக்கும் காட்சியை நடைமுறையில் பார்த்தால் தன் பாக்கெட்டில் உள்ள பணத்தையெல்லாம் அள்ளி அள்ளி தம்பிக்குத் தரும் ரஜினி நடித்த காட்சிகள்தான் நினைவிற்கு வரும். ஒரு பக்கம் சென்டிமென்ட், இன்னொரு பக்கம் ஆக்ஷன், அடுத்த பக்கத்தில் இயல்பான நகைச்சுவை, ரொமான்ஸ் என்று ரஜினி விதம் விதமான பரிமாணங்களில் நடித்த ‘படிக்காதவன்’ திரைப்படத்தை தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த ஜனரஞ்சக திரைப்படங்களில் ஒன்றாகச் சொல்லலாம்.

படிக்காதவன்

`படிக்காதவன்’ படத்தில் உங்களுக்குப் பிடித்த விஷயம் என்ன? கமென்ட்டில் சொல்லுங்கள். அப்படியே இந்தத் தொடரில் அடுத்து வேறென்ன படத்தைப் பற்றிப் பார்க்கலாம் என்பதையும் சொல்லுங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.