சென்னை: பட்டினப்பாக்கம் கடற்கரையில் பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை உட்பட 2 கற்சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. அந்த சிலைகளை வீசிச் சென்றது யார் என போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலைய காவலர்களான நவின் மற்றும் விமல் (ஓட்டுநர்) ஆகியோர் நேற்று முன்தினம் மாலை ரோந்து வாகனத்தில் பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அதே பகுதி சீனிவாசபுரம், துலுக்கானத்தம்மன் கோயில் எதிரில் உள்ள கடற்கரையில் 2 கற்சிலைகள் ஒதுங்கியுள்ளன என்று தெரிவித்தனர்.
இதையடுத்து, அங்கு விரைந்த போலீஸார் கரை ஒதுங்கிக் கிடந்த சுமார் இரண்டரை அடி உயரம் கொண்ட பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை, ஒன்றரை அடி உயரம் கொண்ட ராமானுஜர் போன்று உள்ள சிலை ஆகியவற்றை மீட்டனர். உடனடியாக அந்த சிலைகள் பட்டினப்பாக்கம் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டன. அங்கு பூஜைகள் செய்யப்பட்டு மயிலாப்பூர் வட்டாட்சியரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன.
இந்த சிலைகள் எந்த கோயிலில் இருந்து திருடப்பட்டவை; இவற்றை வீசிச் சென்றவர்கள் யார்? என பட்டினப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறைக்கும், தொல்லியல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்து ஆய்வு செய்து எத்தனை ஆண்டுகளுக்கு முந்தைய சிலைகள் என கண்டறிவார்கள் என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.