கூடலூரில் காங்கிரஸ் உட்கட்சி தேர்தலில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஒரு தரப்பிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு ஒருதலைப் பட்சமாக செயல்பட்டதாக மற்றொரு தரப்பினர் குற்றம்சாட்டி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இன்று காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. மாவட்டம், நகரம் மற்றும் பூத் அளவிலான நிர்வாகிகளிடம் இருந்து வேட்பு மனு பெறப்பட்டு உட்கட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர்களாக கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த பவுலோஸ் மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நடராஜன் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஒரு தரப்பிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக காங்கிரஸ் கட்சியின் மற்றொரு தரப்பினர் குற்றம் சாட்டி இருந்தனர்.
இன்று கூடலூர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வேட்பு மனு பெறப்பட்டு வந்த நிலையில், கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதத்தை அடுத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி பவுலோஸ் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். வேட்புமனு பெறும் பணியில் இருந்த பூத் அளவிலான தேர்தல் நடத்தும் அதிகாரி நடராஜனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இருதரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. குற்றச்சாட்டு குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி நடராஜனிடம் கேட்டபோது, இதற்கு பதிலேதும் கூற முடியாது எனவும், மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கேட்டுக்கொள்ளவும் என கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM