கோவையிலிருந்து ஷீரடிக்கு முதல் தனியார் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக மதுரையிலிருந்து காசிக்கு பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் தனியார் ரயில் சேவை தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் பி.ஜி. மல்லையா தெரிவித்தார்.
மதுரை வந்திருந்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் சமீபத்தில் ரயில் சேவை தொடங்கப்பட்ட மதுரை – தேனி ரயில் பாதையை ஆய்வு செய்தார். தொடர்ந்து சாலை மார்க்கமாக சென்று தேனி – போடிநாயக்கனூர் பகுதியில் நடைபெற்று வரும் அகல ரயில் பாதை பணிகளையும் ஆய்வு செய்தார்.
அதன் பின்பு மதுரை ரயில் நிலையத்துக்கு வந்தவர் ‘ஒரு நிலையம் ஒரு பொருள்’ திட்டத்தின் கீழ் திறக்கப்பட்ட மதுரையின் பிரபலமான சுங்கடி சேலை விற்பனையகத்தை பார்வையிட்டார். ரயில் நிலைய வெளி வளாகப்பகுதியில் மழைநீர் சேகரிப்பு ஏற்பாடுகளையும் ஆய்வு செய்தார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், “தேனி – போடி இடையிலான அகல ரயில் பாதை திட்டம் வருகிற ஆகஸ்ட் மாதம் நிறைவடையும். பாம்பன் புதிய மேம்பால பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவடையும்.
பாரத் கெளரவ் திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேயில் மதுரை – காசி இடையிலான தனியார் ரயில் சேவை திட்டத்திற்கு வந்துள்ள விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
காரைக்குடி – திருவாரூர் ரயில் பாதையில் கேட் கீப்பர்களாக முன்னாள் ராணுவத்தினரை பணியமர்த்தும் வேலைகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் நிறைவடைந்தும் அந்த மார்க்கத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.
பொது மேலாளருடன் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் ஆனந்த் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர்.