இஸ்லாமாபாத்:துபாயில், பாக்., முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரபின் உடல்நிலை மோசமடைந்து உள்ளதால், அவரை விமானத்தில் அழைத்து வந்து, உயர் சிகிச்சை அளிக்க தயாராக உள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் ராணுவ தளபதியாக இருந்த பர்வேஸ் முஷாரப்,78, ராணுவ நடவடிக்கை வாயிலாக, 1999ல் பிரதமர் நவாஸ் ஷெரீபிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றினார். அது முதல், 2008 வரை, பாக்., அதிபராக பதவி வகித்தார். இந்தியா – பாக்., இடையிலான கார்கில் போருக்கு முஷாரப் தான் காரணம். கடந்த 2016 முதல், அவர் மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் முஷாரப், ‘அமிலாய்டோசிஸ்’ எனப்படும் உடல் உள்ளுறுப்பு திசு வளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு, மூன்று வாரங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து வருவதாக குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், முஷாரப் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அவரை ‘ஆம்புலன்ஸ்’ விமானத்தில் அழைத்து வந்து, உயர் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாக அவரது குடும்பத்தாரிடம் பாக்., ராணுவம் தெரிவித்துள்ளது. முஷாரப், பாக்., முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவின் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். அவர் மீது, 2007ல் பாக்., அரசியல் சாசன சட்டத்தை ரத்து செய்த வழக்கும் உள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக, 2016ல் துபாய் சென்றவர், அதன் பின் பாக்., திரும்பவில்லை. தற்போது பாக்., திரும்பி உடல் நிலை தேறினால், அவர் சிறை செல்ல நேரிடும்.
Advertisement