பலப்பரீட்சை தொடங்கிய ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் அணிகள்: யார், யார் எந்தப் பக்கம்?

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில் இருந்து சசிகலா வெளியேற்றப்பட்டதை அடுத்து, அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் வெளிப்படையாக வெடித்துள்ளது.

அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வருகிற 23 ஆம் தேதி கூடுவதற்கு முன்னதாக, அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாலர்கள் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று (ஜூன் 14) சென்னையில் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று வலியுறுத்தியதை அடுத்து அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் முதல்முறையாக பொதுவெளியில் வெளிப்படையாக எழுந்துள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்பது அக்கட்சியில் வீசும் இன்னொரு புயல் என்றே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். ஏனென்றால், ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அணிகள் இணைந்தாலும் இருவருக்கும் இடையே புகைச்சல் தொடர்ந்து இருந்து வந்தது.

அதிமுக ஒற்றைத் தலைமை விவாதம் எழுந்தது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஊடகங்களில் கூறியதை அடுத்து, தொண்டர்களின் மத்தியிலும் அந்த விவாதம் பரபரப்பாக பற்றிக்கொண்டது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவாதம் எழுந்ததுமே, தலைமைக் கழக நிர்வாகிக்ள், மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் யார் யார் ஓ.பி.எஸ் – இபி.எஸ் பக்கம் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. நிர்வாகிகள் மத்தியில் மட்டுமல்லாமல் தொண்டர்கள் மத்தியிலும் யார் எந்த பக்கம் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்-ஐ முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், ஆர்.பி. உதயகுமார் நேற்று அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தனர்.

இ.பி.எஸ் முதல்வராகவும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராகவும் தேர்தலில் முதல்வர் வேட்பாளராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் ஓ.பி.எஸ்-ஐ ஓவர்டேக் செய்திருந்தாலும் அதிமுக பொதுச்செயலாளர் பதவியை இ.பி.எஸ்-க்கு விட்டுக்கொடுக்க திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக தெரிவிக்கின்றனர்.

ஓ.பி.எஸ்-தான் அதிமுகவின் ஒற்றைத் தலைமை என்று அவருடைய ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டி தங்கள் பலத்தைக் காட்டியுள்ளனர்.

அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவியைக் கைப்பற்றி கட்சியின் ஒற்றைத் தலைமையாக நிலைநிறுத்திக்கொள்ள இ.பி.எஸ் – ஒ.பி.எஸ் இடையே கடும் போட்டி தொடங்கியுள்ளது. இ.பி.எஸ் – ஒ.பி.எஸ் இருவருமே தங்கள் ஆதரவாளர்களிடம் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். பொதுக்குழுவில் தனது பலத்தை நிரூபித்து பொதுச் செயலாளர் பதவியைக் கைப்பற்றும் முயற்சியில் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இருவரும் பலப்பரிட்சையில் இறங்கியுள்ளனர்.

இதில் முதல் குரலாக அதிமுக முன்னாள் அமைச்சரும் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளருமான திண்டுக்கல் சீனிவாசன் தனது ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு என்று தெரிவித்துள்ளார்.

சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள வீட்டில், ஓ.பன்னீர்செல்வம் நடத்திய ஆலோசனையில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், நெல்லை மற்றும் தேனி மாவட்ட செயலாளர்கள், வேளச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ., அசோக் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

அதே போல, எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் நடண்ட ஆலோசனையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தளவாய் சுந்தரம், கோவை சத்யன் பங்கேற்றுள்ளனர். மேலும், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், எடப்பாடி பழனிசாமியை சந்தித்துவிட்டு ஓ.பன்னீர் செல்வத்தையும் சந்தித்தனர்.

இதனிடையே, தற்போதைக்கு ஒற்றை தலைமை குறித்து நிர்வாகிகள் யாரும் பொதுவெளியில் பேச வேண்டாம் என மூத்த நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் கூறி இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்புகளை வைத்து மட்டுமே யார் யார் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் பக்கம் என்று பேசப்படுகிறது. ஆனாலும், சந்திப்புகளை வைத்து மட்டுமே அரசியலில் எதையும் உறுதியாக இறுதியாகக் கூற முடியாது. பொதுக்குழு நெறுங்கும்போதுதான் யார் யார் எந்த பக்கம் என்று உறுதியாகும் அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.