தமிழ் சினிமாவின் வரலாற்றில் இவருக்கு நிச்சயம் ஒரு இடமுண்டு. இயக்குநர், குணச்சித்திர நடிகர் எனப் பன்முகங்கள் கொண்ட மனிதர் மணிவண்ணன். அவரின் நினைவு நாள் இன்று.
23 வயதில் பாரதிராஜாவின் படம் பார்த்துவிட்டு சென்னைக்கு பெட்டி படுக்கையோடு கிளம்பியவரை தமிழ் சினிமா கைவிடவில்லை.
பாரதிராஜாவுக்கும் தனக்கும் உள்ள உறவை குரு-சிஷ்யன் என்பதைத் தாண்டி தந்தை-மகன் உறவு என்கிறார் மணிவண்ணன்.
பாரதிராஜாவின் படங்களில் கதை மற்றும் வசனகர்த்தாவாக தனது சினிமா பயணத்தைத் தொடங்குகிறார். முதல் படம் `நிழல்கள்’. படம் வெற்றிக்கு கைகொடுக்கவில்லையெனினும் பாடம் சொல்லிக் கொடுத்தது.
அடுத்த படம் ‘அலைகள் ஓய்வதில்லை’ முதல் படத்திற்கும் சேர்த்து இதில் தன்னை நிரூபித்துக் காட்டினார்.
அப்பா உள்ளூர் தொழில் பிரமுகர். சின்ன வயதில் இருந்தே அரசியல் பின்புலம் அறிந்ததால்தான் அவரது படங்களில் அரசியல் கிண்டல் இழையோடுகிறது என்று சொல்லலாம்.
இவர் இயக்கத்தில் வெளியான முதல் படம் ‘கோபுரங்கள் சாய்வதில்லை’. 1982-ல் படம் வெளியானது.
1994-ம் ஆண்டு சத்யராஜ் நடிக்க ‘அமைதிப்படை’ படத்தை இயக்குகிறார். இன்றைக்கு வரைக்கும் கொண்டாடப்படும் அரசியல் நையாண்டி படம் ‘அமைதிப்படை’
மணிவண்ணன் இயக்கிய படங்கள் மிகச்சரியாக 50. அவர் நடித்த படங்கள் 400-க்கும் மேல் இருக்கும். நீண்ட இடைவேளைக்குப் பிறகு ‘அமைதிப்படை 2’ இயக்குகிறார். அடுத்த சில மாதங்களில் அவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்.
அரசியல் தெளிவு, கூர்மையான பகடி, துணிவான பேச்சு என சினிமா தாண்டி பொது வாழ்விலும் தன் அடையாளத்தை விட்டுத் தராதவர் மணிவண்ணன். அவரின் நினைவை அவர் இயக்கிய, நடித்த படங்கள் எப்போதும் பேசும்.