எஸ்.இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர்
எல்லா கட்சியிலும் ஓனர் இருப்பார்கள். அவர்களிடம் கைகட்டி நிற்க வேண்டும். ஆனால் பாஜகவில் யார் வேண்டுமானாலும் தலைவராக வரலாம். எனவே யாரிடமும் கைகட்டி நிற்க வேண்டிய அவசியம் இருக்காது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் ரஜினி கணேசன் உள்பட ஐநூறுக்கு மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் பாஜக மாநிலை தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, மோடி என்பவர் பாஜகவில் ஒரு தொண்டன். அவர் பிரதம மந்திரியாக வேலை செய்கிறார் என்றார்.
தாய் மொழி, கலாச்சாரம் எல்லாத்தையும் தாண்டி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மக்கள் பாஜகவை ஏற்றுக் கொண்டுள்ளனர். எனவே அவரவர் மொழிக்கு உரிய மரியாதை தரப்படும். அவரவர் மாநிலங்களில் அவரவராக இருக்க வேண்டும். ஆனால் ஒட்டுமொத்தமாக அனைவரும் தேசியவாதியாக இருக்க வேண்டும்.
ஆன்மீக அரசியல் என்பது இந்து மதத்தையோ, இஸ்லாம் மதத்தையோ அல்லது கிறிஸ்துவ மதத்தையோ சார்ந்தது அல்ல. ஆன்மீக அரசியல் என்பது எதிலும் பற்று இன்றி இருக்க வேண்டும். அதுவே ஆன்மீக அரசியல்.
எல்லா கட்சிகளிலும் ஓனர் இருப்பார்கள். அங்கு இருப்பவர்கள் தந்தையிடம் கைகட்டி நிற்க வேண்டும். பிறகு மகனிடம் கைகட்டி நிற்க வேண்டும். பின்னர் பேரனிடம் கைகட்டி நிற்க வேண்டும். டெல்லியிலும், கோபாலபுரத்திலும் அதன் ஓனர்கள் இருப்பார்கள். ஆனால் பாஜகவில் யார் வேண்டுமானாலும் தலைவராக வரலாம் என்ற நிலை உள்ளது. எனவே யாரிடமும் கை கட்டி நிற்க வேண்டிய அவசியம் இருக்காது என்றார் அண்ணாமலை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“