பிரான்சில் உணவுப்பொருள் ஒன்றில் நோய்க்கிருமிகள் இருக்கும் அபாயம் இருப்பதைத் தொடர்ந்து அந்த உணவுப்பொருளை பல்பொருள் அங்காடிகள் திரும்பப் பெற்றுவருகின்றன.
Malo yoghurt என்று அழைக்கப்படும் யோகர்ட்டில், ஈ.கோலை என்னும் நோய்க்கிருமிகள் இருக்கும் அபாயம் இருப்பதாக தெரியவந்துள்ளதையடுத்து, அவை திரும்பப் பெறப்பட்டுவருகின்றன.
ஜூன் 8ஆம் திகதிக்கும் 10ஆம் திகதிக்கும் நடுவில் விற்பனைக்கு வைக்கப்பட்ட, 2022 ஜூலை 11 முதல், ஜூலை 22 வரையிலான காலாவதி திகதியுடைய அனைத்து யோகர்ட் பாக்கெட்களும் திரும்பப் பெறப்படுகின்றன.
Saint-Malo என்ற இடத்தில் தயாரிக்கப்படும் இந்த யோகர்ட் பிரான்ஸ் முழுவதும் விநியோகிக்கப்பட்டுவருகிறது.
இந்த யோகர்ட்டை வாங்கியவர்கள் அதை உட்கொள்ளவேண்டாம் என்றும், அதை வாங்கிய கடையிலேயே திருப்பிக் கொடுத்து பணத்தைத் திருப்பிப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
இந்த ஈ.கோலை என்னும் நோய்க்கிருமி, வயிற்று வலி முதல் இரத்தத்துடன் வெளியேறும் வயிற்றுப்போக்கு வரையிலான பிரச்சினைகளை உருவாக்கக்கூடியது. சில நேரங்களில் காய்ச்சலும் உருவாகக்கூடும். அறிகுறிகள் உடையோர் மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.