பிரித்தானியாவில் பெண்களை பின் தொடர்ந்து துன்புறுத்திய விவகாரத்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு 2 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மொத்தம் 121 பெண்களை குறித்த நபர் பட்டியலிட்டு அவர்களை பின் தொடர்ந்து துன்புறுத்தியுள்ளதாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
மேலும், குறித்த இளைஞரால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என பொலிசார் அச்சம் தெரிவித்துள்ளனர்.
28 வயதான விஷால் விஜாபுரா சமூக ஊடகத்தில் இருந்து பெண்களின் புகைப்படங்களை சேகரித்து, ஒரு பட்டியலாக தயாரித்து அதை அருவருப்பான தலைப்புடன் வெளியிட்டு வந்துள்ளார்.
அவர்கள் மீது ஆபாசமாக தாக்குதல் முன்னெடுக்க தூண்டியும் உள்ளார். மேலும், பல நூறு பவுண்டுகள் செலவிட்டு அவர்களின் தனிப்பட்ட தகவல்களையும் விஷால் விஜாபுரா சேகரித்துள்ளார்.
மட்டுமின்றி, பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப பின்னணி, அவர்களின் குடும்ப சூழல் உட்பட்ட தகவல்களையும் பணம் செலவிட்டு திரட்டியுள்ளார்.
தமது பட்டியலில் உள்ள பெண்கள் பலரிடம் நேரடியாகவே தொடர்பு கொண்டுள்ளதும், அவர்களிடம் உரையாடல் நிகழ்த்தியதும், குறிப்பாக பாலியல் ரீதியாக பேசியும் உள்ளார்.
இதில் பலர் மனதளவில் பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளனர்.
பலர் இவரது தொல்லை காரணமாக சமூக ஊடக கணக்கை முடக்கினால், இன்னொரு கணக்கை துவங்கி, அதன் மூலம் அவர்களை தொடர்பு கொண்டு துன்புறுத்தியுள்ளார்.
இவரது இந்த நடவடிக்கையானது ஜனவரி 2021ல் முதன்முறையாக அம்பலமானது. ஒட்டுமொத்த பிரித்தானியாவில் பெண்களில் பட்டியல் ஒன்றை வெளியிட்டு, அவர்களை ஏன் வன்புணர்வுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் கட்டுரை ஒன்றை பதிவு செய்திருந்தார்.
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட விஷால் விஜாபுரா தற்போது கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், விஷால் விஜாபுராவால் பாதிக்கப்பட்ட பெண்கள் முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், விஷால் விஜாபுராவால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்களை பொலிசார் தொடர்பு கொண்டதில், விஷால் விஜாபுராவுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க அவர்கள் அஞ்சுவதாக தெரிவித்துள்ளனர்.