மதுரை: மதுரை அருகே தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் 3 ஏக்கரில் பிரமாண்டமான ‘ஆக்ஸிஜன் பூங்கா’ (Oxygen bio fuel park) அமைக்கப்பட்டுள்ளது.
சராசரியாக ஒரு மனிதனுக்கு ஆண்டுக்கு 300 கிலோ ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. ஆக்ஸிஜன் முக்கியத்துவத்தை பொதுமக்கள் கரோனா தொற்று பரவல் நேரத்தில்தான் உணரத் தொடங்கினர். நாடு முழுவதும் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடில்லாமல் கிடைக்க ஆக்ஸிஜன் சேமிப்பு கொள்கலன்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதனால், மக்கள், இளைஞர்கள் தற்போது ஆக்ஸிஜன் விழிப்புணர்வு அதிகரித்து ஆக்ஸிஜன் அதிகளவு வெளியிடும் மரவகைகளை வீடுகள் முன்பும், சாலையோரங்களிலும் நடத் தொடங்கி உள்ளனர்.
ஆனால், கடந்த 10 ஆண்டிற்கு முன்பே மதுரை அருகே ஒத்தக்கடையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் 3 ஏக்கரில் பிரமாண்டமான ‘ஆக்ஸிஜன் பூங்கா’ (OXygen bio fuel Park) உருவாக்க ஆக்ஸிஜன் அதிகளவு தரும் பல்வகை மரக்கன்றுகளை நட்டு, தற்போது மிகப்பெரிய ஆக்ஸிஜன் பூங்காவாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கும் பாக்டீரியாக்கள், பசுமை உரம், பண்ணை உரம் ஆகியவை கொண்ட சரிவிகித கலவையில் மரக்கன்றுகள் நடப்பட்டு இந்த ஆக்ஸிஜன் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தப் பூங்காவில் மரக்கன்றுகள் பெரும் மரங்களாகி பசும் சோலையாக திருச்சி – மதுரை சாலையில் செல்வோரை ஈர்த்து வருகிறது. விரைவில் நான்கு வழிச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கள் ரிலாக்ஸ் செயவதற்கான சிற்றுண்டியுடன் கூடிய பூங்காவாக மாற்ற ஏற்பாடுகள் நடக்கிறது.
இதுகுறித்து வேளாண் கல்லூரி பேராசிரியர்கள் கூறும்போது, ”கடந்த 2012-ம் ஆண்டு வேளாண்மை கல்லூரி எதிரே உள்ள 3 ஏக்கர் காலி இடத்தில் வனவியல் அறிவியல் மாநாட்டையொடடி முன்னிட்டு 1,500 மரக்கன்றுகள் நடப்பட்டன. வேம்பு, இலுப்பை, புங்கன்மரம் உள்ளிட்ட பல்வகை மரங்கள் இந்தப் பூங்காவில் உள்ளன. மரங்கள் அடர்த்தியாக உள்ளதால் இந்த இடத்தில் சிறிது நேரம் நின்றால் அருமையான ஆக்ஸிஜன் காற்றையும், நிழலின் அருமையும் உணரலாம். சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மழைப்பொழிவுக்காகவும் மட்டுமே ஆரம்பத்தில் இந்த ஆக்ஸிஜன் பூங்கா உருவாக்கப்பட்டது.
தற்போது இந்த பூங்கா வழியாக தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் திருச்சி – மதுரை நான்கு வழிச்சாலை வழியாக சென்று வருகின்றன. இந்த வானகங்களில் செல்வோர் இளைப்பாறி செல்வதற்காக இந்த ஆக்ஸிஜன் பூங்காவில் சிற்றுண்டியுடன் கூடிய பூங்கா அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பூங்காவில் அமரும் மக்கள் அதிகளவு கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியிடுவார்கள். பூங்காவில் உள்ள மரங்கள் கார்பன்-டை-ஆக்ஸைடு எடுத்துக் கொண்டு அதிகளவு ஆக்ஸிஜனை வெளியிடும்.
அதனால், நான்கு வழிச்சாலையில் பரப்பாக செல்வோர் சிறிது நேரம் இந்த பூங்காவில் அமர்ந்து சென்றால் தொடர்ந்து பயணத்தை நல்ல ஆரோக்கியத்துடன் மேற்கொள்வதற்கு இந்த ஆக்ஸிஜன் பூங்கா உதவியாக இருக்கும். வேளாண் கல்லூரியில் விளைவிக்கப்படும் பழங்கள், காய்கறிகள் விற்கவும், இயற்கை அங்காடியும் டீ, காபியுடன் கூடிய சிற்றுண்டியும் இந்த பூங்காவில் அமைக்கப்படுகிறது” என்று அவர்கள் தெரிவித்தனர்.