தானே: மஹாராஷ்டிராவின் தானே நகர போலீஸ் கமிஷனர் அலுவலக இணையதளம், ‘ஹேக்கர்’ எனப்படும் இணைய ஊடுருவல்காரர்களால் நேற்று முடக்கப்பட்டது.
பா.ஜ.,வின் செய்தி தொடர்பாளராக இருந்த நுாபுர் சர்மா, ‘டிவி’ விவாத நிகழ்ச்சியில், முஸ்லிம் மதத்தை தரக்குறைவாக விமர்சித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, அவர் பா.ஜ.,வில் இருந்து, ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். அவரை கைது செய்ய வலியுறுத்தி, முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், மஹாராஷ்டிராவின் தானே நகர போலீஸ் கமிஷனர் அலுவலக இணையதளத்தை ஹேக்கர்கள் நேற்று முடக்கினர். இணைய பக்கத்தில், ‘இந்திய அரசுக்கு வணக்கம். இஸ்லாமிய மதத்திற்கு நீங்கள் தொடர்ந்து பிரச்னைகளை ஏற்படுத்துகிறீர்கள். எங்கள் இறைதுாதர் அவமதிக்கப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாது. உலகம் முழுதும் உள்ள முஸ்லிம்கள் அனைவரிடமும் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது பற்றி தானே நகர போலீஸ் கமிஷனர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இணையதளம் ஹேக்கர்களால் முடக்கம் செய்யப்பட்டது பற்றி தொழில்நுட்ப குழு விசாரணை நடத்தியது. நிபுணர்கள் உடனடியாக செயல்பட்டு இணையதளத்தை சீரமைத்தனர்’ என்றார்.
Advertisement