மேலும் ஒரு காங். ஆபீஸ் மீது இன்று காலை வெடிகுண்டு வீச்சு : கேரளாவில் பதற்றம் தொடர்கிறது

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று அதிகாலை மேலும் ஒரு காங்கிரஸ் அலுவலகம் மீது குண்டு வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தங்கம் கடத்தல் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக, தங்கராணி சொப்னா கூறிய குற்றச்சாட்டுக்கள் கேரள அரசியல் களத்தில் புயலை கிளப்பி உள்ளது. தொடர்ந்து பினராயி விஜயன் பதவி விலக கோரி கேரளா முழுவதும் எதிர்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு விமானத்தில் வைத்தும் பினராயி விஜயனுக்கு எதிராக இளைஞர் காங்கிரசார் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து கேரளா முழுவதும் கலவரம் வெடித்தது. காங்கிரஸ் மற்றும் சிபிஎம் தொண்டர்கள் நேருக்கு நேர் அடிதடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அதிகாலை கோழிக்கோட்டில் பேராம்பிரா என்ற இடத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் மீது குண்டு வீசப்பட்டது. மேலும் பல இடங்களில் காங்கிரஸ் அலுவலகங்கள் சூறையாடப்பட்டன. இதனால் பதற்றம் மேலும் அதிகரித்தது. இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் கோழிக்கோடு அருகே குற்றியாடி அம்பலத்துங்குளங்கரையில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் மீது ஒரு மர்ம கும்பல் வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பியது. அந்த சமயத்தில் அலுவலகத்தில் வேறு யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து குற்றியாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது. காங்கிரஸ் அலுவலகங்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு காங்கிரஸ் மாநில தலைவர் சுதாகரன், எதிர்க்கட்சி தலைவர் சதீசன் மற்றும் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.