வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வாங்கியதில் நடந்த மோசடி குறித்து, காங்கிரஸ் எம்.பி.,யிடம் 3வது நாளாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை விலைக்கு வாங்கியதில் நடந்த மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, சோனியா, ராகுலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் புதுடில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராகுல் ஆஜரானார். அவரிடம், 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடந்தது.
இரண்டாவது நாளாக நேற்றும் ராகுலிடம் விசாரணை நடந்தது. காலை 11:05 மணிக்கு வந்த அவரிடம் தொடர்ந்து நான்கு மணி நேரம் விசாரணை நடந்தது. மதிய உணவு இடைவேளைக்குப் பின், ஆறு மணி நேரம் என, நேற்று மொத்தம், 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகள் வாங்கியது தொடர்பாக, ராகுலிடம் அதிகாரிகள் பல கேள்விகளை கேட்டனர்.
இதையடுத்து, இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி, ராகுலுக்கு உத்தரவிடப்பட்டது. 3வது நாளாக ராகுலும் நேரில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் கேள்விகளை கேட்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக சோனியா ஜூன் 23ல் ஆஜராக உள்ளார்.
போராட்டம்
ராகுலிடம் விசாரணை நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
Advertisement