ஒவ்வொரு ஆண்டும் தங்களின் ராணுவத்துக்கான நிதியைப் பல நாடுகள் அதிகரித்து வருகிறது. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கில்லை. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் உலக நாடுகள் தங்களின் ராணுவத்துக்கு 2.1 ட்ரில்லியன் டாலரைச் செலவு செய்திருக்கிறது. உலகிலேயே ராணுவத்துக்காக அதிகம் செலவு செய்வதில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் 801 பில்லியன் டாலரை செலவு செய்தது. அந்த வகையில் சீனா, 293 பில்லியன் டாலர் செலவிட்டு 2-ம் இடத்தில் உள்ளது.
இந்தியா கடந்த ஆண்டு மட்டும் ராணுவத்துக்காக 76.6 பில்லியன் டாலர் செலவு செய்துள்ளது. 2012-ம் ஆண்டிலிருந்து இந்தியா தனது ராணுவத்துக்குச் செலவிடும் தொகை 33 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ராணுவத்தில் தேவையில்லா செலவைக் குறைக்க மத்திய பாதுகாப்புத்துறை பல்வேறு கட்ட ஆலோசனைகளைச் செய்து வந்தது.
அதன்படி, அக்னிபத் என்ற புதிய திட்டத்துக்கு அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
அக்னிபத் என்றால் என்ன?
அக்னிபத் திட்டத்தின்படி ராணுவத்தில் 17.5 முதல் 21 வயதுள்ள 45 ஆயிரம் பேர், 4 ஆண்டு ஒப்பந்தம் அடிப்படையில் ராணுவத்தில் சேர்க்கப்படவுள்ளனர். இதன்மூலம் இளைஞர்களுக்கு பணிபுரிய வாய்ப்பு கிடைப்பதோடு, ஆயுதப்படை இளம் வீரர்கள் படையாகும் என்று அமைச்சகம் தெரிவிக்கிறது.
இதற்கான ஆள்கள் தேர்வு அடுத்த 90 நாட்ள்களில் ஆன்லைன் மூலம் முறையில் நடக்கவுள்ளது. இதில் தேர்வாகும் இளைஞர்கள் அக்னிவீரர்கள் என அழைக்கப்படுவார்கள். ஆயுதப்படைக்கு வழக்கமாக ஆள்கள் தேர்வு செய்வதற்கான கல்வி தகுதியே, அக்னிவீரர்களுக்கும் பொருந்தும். அதன்படி, புதிய தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்ட மட்டங்களில் பயிற்சி வழங்கப்படும். பல்வேறு துறைகளில், புதிய திறன்களுடன் வேலைவாய்ப்புகளை இந்த திட்டம் உருவாக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருப்பர். இதற்காக மாத சம்பளம் ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரத்துடன் படிகளும் வழங்கப்படும். மருத்துவ மற்றும் காப்பீடு வசதிகளும் வழங்கப்படும்.
4 ஆண்டுகளுக்குப் பின்னர், 25 சதவீத வீரர்களுக்குப் பணி நீட்டிக்கப்பட்டு, ஆயுதப்படைகளில் 15 ஆண்டுக்காலம் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள். ஆயுதப்படையில் சேர முடியாதவர்களுக்கு 11 லட்சம் முதல் 12 லட்சம் வரை நிதி வழங்கப்படும். ஆனால், அவர்கள் ஓய்வூதிய பலன்கள் பெற முடியாது. இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், ராணுவத்தின் செலவு குறையும் என மத்திய அரசு கூறியுள்ளது.
ஆனால், ஆயுதப்படையில் அனுபவமில்லா இளைஞர்களைச் சேர்க்கும்போது, தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, லெப்டினன்ட் கர்னல் (ஓய்வு) நா. தியாகராஜனிடம் கேட்டபோது, “அக்னிபத் திட்டம் இந்திய ராணுவத்தில் இளைஞர்களை அதிகப்படியாகச் சேர்க்கும் நல்ல திட்டமாகும். முப்படைகளில் பணியாற்ற இளைஞர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாகும். பணி நீட்டிப்பாகும் வீரர்களுக்குக் கூடுதலாகப் பணி புரிய வாய்ப்பு கிடைக்கும். அவர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பிற பயன்களையும் அடைவார்கள்.
ராணுவம் என்றாலே முதலில் ஒழுக்கம், கட்டுப்பாடுதான். அக்னிபத் மூலம், ஒழுக்கமான இளைஞர்களை நாம் உருவாக்க முடியும். ஒழுக்கமான பொதுமக்களால்தான், வளமான நாட்டை உருவாக்க முடியும்.
அதேநேரத்தில், பணி நீட்டிப்பு இல்லாத மீதமுள்ள வீரர்கள் நிலை என்னவாகும் என்றே தெரியவில்லை. அவர்கள் சமுதாயத்தில் மீண்டும் தங்களை நிரூபிக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால், அவர்கள் மன உளைச்சலுக்கும் ஆகலாம். அதேபோல, ராணுவத்தில் சேரும் ஒரு நபர் சேர்ந்த சிறந்த வீரராக மாறுவதற்கு, குறைந்தது 2 அல்லது 3 ஆண்டுகள் ஆகிவிடும். இந்நிலையில், 4 ஆண்டுகளில் 75 சதவீத வீரர்கள் பணிவிடுப்பு செய்யப்பட்டுவிடுவர். இந்த காலகட்டங்களில் போர் சூழல் ஏற்பட்டால், வலிமையான ராணுவம் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் எழாமல் இல்லை. அதேநேரத்தில், இருக்கும் அத்தனை வீரர்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள். ஆனால், குறைவான எண்ணிக்கையில் இருப்பார்கள். இதனை பாதுகாப்புத்துறையும் கவனித்திருக்கும். இது ஒரு பின்னடைவாக இருக்கலாம். அதேபோல, பணி நீட்டிப்பு செய்யப்படாத வீரர்களுக்கு மத்திய மாநில அரசுகள் இணைந்து, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கவேண்டும்” என்றார்.
அக்னிபத் திட்டம் இந்திய ராணுவத்துக்கு வலிமையைச் சேர்க்கும் என்று இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, கடற்படை தலைவர் ஹரிகுமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். அதேபோல, திட்டம் குறித்து முழுமையாக விளக்கம் அளிக்க சில ராணுவ அதிகாரிகளை அணுகினோம். ஆனால், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் என்பதால் இதுகுறித்து பேச முடியாது என்று தெரிவித்துவிட்டனர்.
உலகில் மிகப்பெரிய ராணுவத்தைக் கொண்ட நமது நாட்டில் எல்லைப் பகுதிதான் அதிகப்படியான தீவிரவாத தாக்குதலை சந்திக்கிறது. இதனை தடுக்க நமக்கு அதிகப்படியான வீரர்கள் தேவைப்படுகிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தரைப்படை, கப்பல் படை, விமானப் படையைப் பலப்படுத்த தற்காலிக பணியிடங்கள் அமைக்கும் அக்னிபத் திட்டம் எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்!