ரூ.10 கோடி மதிப்பு: இருக்கன்குடி கோயில் நிர்வாகிகளிடம் தங்க முதலீடு பத்திரத்தை ஒப்படைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..

சென்னை:  ரூ.10 கோடி மதிப்பிலான தங்க முதலீட்டு பத்திரத்தை இருக்கன்குடி மாரியம்மன்  கோயில் நிர்வாகிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஒப்படைத்தார்.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்ததும், அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் உள்ள தங்க நகைகளை உருக்கி அதை, இந்திய ரிசர்வ் வங்கியில் தங்க பத்திரமாக முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்தது. அதில் இருந்து வரும் வட்டியைக்கொண்டு கோவில் நிர்வாக பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்தது. அதைத்தொடர்ந்து அதற்கான குழு அமைத்து, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பிரபலமான இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு காணிக்கையாக வந்த தங்கத்தை சுத்த தங்க கட்டிகளாக மாற்றி வங்கிகளில் முதலீடு செய்ய பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.10 கோடி மதிப்பிலான தங்க முதலீட்டு பத்திரத்தை இருக்கன்குடி மாரியம்மன் கோயில் நிர்வாகிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஒப்படைத்தார்.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இருக்கன்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் உள்ள பயன்பாட்டில் இல்லாத பலமாற்றுப் பொன் இனங்கள் பிரித்து எடுக்கப்பட்டு, உருக்கி சுத்த தங்கக்கட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டு, பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்ட,  ரூ.10 கோடி மதிப்பீட்டிலான தங்க முதலீட்டுப் பத்திரத்தை கோயில் நிர்வாகிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வழங்கினார் இந்த பத்திரம், மூலம் வரும் வட்டியின் உதவியுடன் கோயில் திருப்பணி மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தங்கப் பத்திரம்

தங்கத்தில் முதலீடு செய்வதற்கான ஒரு சிறந்த வழி, தங்கப் பத்திரங்களை வாங்குவது. இதன் மூலம் நீங்கள் வட்டியை பெறலாம். நகைகள் வாங்கும்போது ஏற்படும் சேதாரம் போன்ற இழப்புகள் இதில் ஏற்படாது.  ஆனால், இந்த பத்திரம் முறையில், உங்களுக்கு   தங்க நாணயங்கள் அல்லது கட்டிகள் போன்ற வடிவத்தில் தங்கம் உங்களுக்கு கிடைக்காது. பாண்ட்(பத்திரம்) என்றால் ஒரு வகையான பாதுகாப்பு அதாவது, நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு அரசு உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

இந்திய ரிசர்வ் வங்கி, தங்கப் பத்திரங்களை வெளியிடுகிறது மற்றும் அதற்கு ஒரு குறிப்பிட்ட விலையை நிர்ணயிக்கிறது. இந்த முறை அதன் விலை கிராமுக்கு ரூ .4662 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எஸ்ஜிபி எட்டு ஆண்டுகளில் முதிர்ச்சியடைகிறது. நீங்கள் பத்திரத்தைத் திருப்பித் அளிக்கும்போது, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இருக்கும் தங்கத்தின் விலையின்படி நீங்கள் தொகையைப் பெறுவீர்கள். மேலும் அந்த நேரத்தில் கிடைக்கும் லாபத்தின் மீது வரியும் இல்லை. நீங்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கு பத்திரங்களை வாங்கி, அதை திருப்பித்தரும்போது ஒன்றரை லட்சம் ரூபாய் கிடைத்தால், அந்த கூடுதல் 50 ஆயிரம் ரூபாய்க்கு வரி கிடையாது.

இந்த பத்திரங்கள் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படுகின்றன மற்றும் அவற்றின் விலைகள் வேறுபடுகின்றன. அவற்றின் விலையை மும்பையைச் சேர்ந்த இந்தியன் புல்லியன் மற்றும் ஜூவல்லர்ஸ் அசோசியேஷன் (Indian bullion and jewellers association) தீர்மானிக்கிறது.

தேவைப்பட்டால் நீங்கள் எட்டு ஆண்டுகளுக்கு முன்பே பத்திரங்களை விற்கலாம். ஆனால், ஐந்தாண்டுகள் நிறைவடைவதற்கு முன்பே பத்திரத்தை விற்றால், உங்களுக்கு கிடைக்கும் லாப தொகைக்கு வரி செலுத்த வேண்டும்.

தங்களிடம் உள்ள நகைகளை பாதுகாக்க சிரமப்படுபவர்கள், தங்கப்பத்திரம் வாங்கி தங்களது சேமிப்புகளை அதிகரிக்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.