கோலிவுட்டில் ‘விக்ரம்’ படம் அதிரடி வசூலை குவித்துவரும்நிலையில், கேரளா மாநில செய்தியாளர் சந்திப்பில் கேள்வி ஒன்றுக்கு அனிருத் அளித்தப் பதில் வைரலாகி வருகிறது.
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 3-ம் தேதி வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் தாறுமாறான வசூலுடன், தற்போதும் திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கமல் நடித்தப் படங்களிலேயே இந்தப் படம் தான் அதிகளவிலான வசூலை ஈட்டியுள்ளது. 12 நாட்கள் ஆகியும் திரையரங்குகளில் கூட்டம் குறையாதநிலையில், மேலும் படத்தின் வசூல் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
300 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ள இந்தப் படம் தமிழகத்தில் மட்டும் 125 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. எந்த ஒரு தமிழ் படங்களும் சாதிக்காததை, கேரள மாநிலத்தில் ‘விக்ரம்’ படம் சாதித்து வருகிறது. அங்கு நடிகர் விஜய் படங்களுக்கு அதிக வசூல் எப்போதும் இருக்கும். ஆனால் அதையெல்லாம் ‘விக்ரம்’ படம் முறியடித்து 12 நாட்களிலேயே 35 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்துள்ளது.
இதையடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் நேற்று திருச்சூரில் உள்ள திரையரங்கிற்கு சென்றனர். அப்போது அவர்களை ரசிகர்கள் கூட்டம் சூழ்ந்து கொண்டது. இதனை ‘விக்ரம்’ படத்தின் கேரள விநியோகஸ்தர் ஷிம்பு தமீன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Ulaganayakan @ikamalhaasan sir #VIKRAM success theatre visit at Ragam theatre trichur . Love extended to @Dir_Lokesh nd @anirudhofficial by fans was like trissur pooram @RKFI @turmericmediaTM @riyashibu_ pic.twitter.com/FsHNF6lgJ5
— Shibu Thameens (@shibuthameens) June 13, 2022
பின்னர் கேரளாவில் லோகேஷ் கனகராஜ், அனிருத், விநியோகிஸ்தர் ஷிம்பு தமீன்ஸ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது படம் தொடர்பாக லோகேஷ் மற்றும் அனிருத்திடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. அதில் செய்திளார் ஒருவர், ‘விக்ரம்’ படம் வெற்றியடைந்ததை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ்-க்கு ஆடம்பர கார் பரிசளித்தார், சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்தார், தங்களுக்கு என்ன பரிசு” என்று அனிருத்திடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அனிருத், தனக்கு ‘விக்ரம்’ படம் கொடுத்ததுதான் பரிசு என்று நகைச்சுவையாக பதிலளித்தார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.