சென்னை: வரி ஏய்ப்பு குற்றச்சாட்டைத் தொடர்ந்து எம்ஜிஎம் குழுமத்துக்கு சொந்தமான சென்னை அலுவலகம் உட்பட சுமார் 40 இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
பிரபல தொழில் நிறுவனமான எம்ஜிஎம் குழுமம், பொழுதுபோக்கு பூங்கா, ஓட்டல், நட்சத்திர விடுதி, மதுபான தொழிற்சாலை, வர்த்தக நிறுவனம், தொழில் நிறுவனம், சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள எம்ஜிஎம் பொழுதுபோக்கு பூங்காவும் இந்த நிறுவனத்துக்கு சொந்தமானது.
சென்னை மட்டுமின்றி காஞ்சிபுரம், நெல்லை, தூத்துக்குடி, திண்டிவனம், மதுரை, வேளாங்கண்ணி, பெங்களூரு உட்பட பல்வேறு இடங்களிலும் எம்ஜிஎம் நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள் உள்ளன. இந்த குழுமம் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள எம்ஜிஎம் நிறுவன அலுவலகம், சாந்தோமில் உள்ள உரிமையாளர் வீடு, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஓட்டல்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.
எம்ஜிஎம் நிறுவனத்துக்கு சொந்தமான விழுப்புரம் எல்லீஸ் சத்திரம் சாலையில் அமைந்துள்ள மதுபான தொழிற்சாலை, நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள நட்சத்திர விடுதி ஆகியவற்றிலும் சோதனை நடந்தது.
தமிழகத்தின் பல்வேறு இடங்கள், பெங்களூரு உட்பட குழுமத்துக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரி அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில், 200-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.
சோதனை குறித்து, வருமானவரித் துறை அதிகாரிகள் கூறும்போது, “வரி ஏய்ப்பு மற்றும் கணக்கில் காட்டாத வருவாய் தொடர்பான புகார்கள் அடிப்படையில், எம்ஜிஎம் குழுமத்துக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், வரி ஏய்ப்பு செய்ததற்கான சில ஆவணங்கள், கணக்கில் காட்டப்படாத சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சோதனையின் முடிவில் அதுகுறித்த விவரம் தெரிவிக்கப்படும்” என்றனர்.