விஜய் படம் இயக்குவதற்கு முன்பாக திருப்பதி சென்று வழிபட்ட லோகேஷ் கனகராஜ்
கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குள் நான்கே படங்களில் முன்னணி இயக்குனர் என்கிற அந்தஸ்தை அடைந்து விட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். குறிப்பாக விஜய்யை வைத்து மாஸ்டர், கமலை வைத்து விக்ரம் என இரண்டு பெரிய நடிகர்களை வைத்து அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்துள்ள லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக மீண்டும் விஜய் படத்தை இயக்க உள்ளார் என்கிற தகவல் ஏற்கனவே வெளியானது.
விக்ரம் படத்தின் வெற்றியால் மிகவும் மகிழ்ச்சியில் உள்ள கமல் அந்த வெற்றிக்கான பாராட்டு, தனது ரசிகரான லோகேஷ் கனகராஜுக்கும் கிடைக்க வேண்டுமென சமீபத்தில் ஆந்திராவில் சிரஞ்சீவி அளித்த விருந்தில் கலந்துகொள்ள தன்னுடன் அழைத்து சென்றிருந்தார். இந்த நிகழ்வில் நடிகர் சல்மான்கானும் கலந்து கொண்டார்.
இதையடுத்து கமலிடம் இருந்து விடைபெற்றுக் கொண்ட லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே திட்டமிட்டு இருந்தபடி தனது நண்பர்களுடன் அங்கிருந்து திருப்பதி கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளார். அவருடன் அவரது ஆஸ்தான கதாசிரியரும் இயக்குனருமான ரத்தனகுமார் மற்றும் விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர். அந்தவகையில் லோகேஷ் கனகராஜ் அடுத்து விஜய் படத்தை இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றே சொல்லலாம்.