‘விபத்து அவசர சிகிச்சை மையம்’ – தமிழக அளவில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதலிடம்

மதுரை: நோயாளிகளுக்கு உயிர் காக்கும் அவசர சிகிச்சை வழங்குவதில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் ‘விபத்து அவசர சிகிச்சை மையம்’ மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, தென் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துமவனைகளில் முதன்மையானது. மதுரை மட்டுமில்லாது, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து அனைத்து விதமான நோய்களுக்கும் நோயாளிகள் சிகிச்சைப்பெற வருகிறார்கள்.

இதற்காக அண்ணா பஸ் நிலையம் அருகே கட்டிடத்தில் விபத்துகளில் மட்டுமே காயமடைவோருக்கு சிகிச்சை வழங்க ஓர் அவசர சிகிச்சை மையமும், கோரிப்பாளையம் பழைய கட்டிடத்தில் காயமில்லாத அவசர சிகிச்சை நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க மற்றொரு அவசர சிகிச்சை மையமும் செயல்படுகிறது. மொத்தம் 100 படுக்கை வசதிகளுடன் 24 மணி நேரமும் செயல்படுகிறது.

இதில், விபத்து அவசர சிகிச்சை மையம் தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு இணையான மருத்துவ கட்டமைப்பு, மருத்துவ நிபுணர்கள் வசதிகளுடன் செயல்படுகிறது. ஷிஃப்ட் அடிப்படையில் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய, மருத்துவ ஆலோசனைகள் வழங்க அவசர சிகிச்சைப்பிரிவு துறைத் தலைவர் தலைமையில் பேராசிரியர்கள், இணை மற்றும் உதவிப் பேராசிரியர்கள், பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியார்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த அவசர சிகிச்சை மையங்களில் பணிபுரிகிறார்கள்.

அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை காக்க வைக்கப்படாமல் உடனுக்குடன் தேவையான மருத்துவப் பரிசோதனைகள் எடுத்து அடுத்த 6 மணி நேரத்தில் தேவைப்படுவோருக்கு அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகிறது. அதனால், அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளில் தமிழகத்தின் மற்ற மருத்துவமனைகளுடன் ஒப்பிடும்போது இறப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இந்நிலையில், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்தில் இலவச சிகிச்சை அளிக்கும் 2022-ஆம் ஆண்டிற்கான ’நம்மை காக்கும் 48’ திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்திலும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் விபத்து அவசர சிகிச்சை மையம் சிறப்பாக செயல்படுகிறது. நோயாளிகளுக்கு உயிர் காக்கும் அவசர சிகிச்சை வழங்குவதில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் ‘விபத்து அவசர சிகிச்சை மையம்’ மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளது.

இதுகுறித்து ‘டீன்’ ரத்தினவேலு கூறுகையில், ‘‘மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பணிகளை பாராட்டி தமிழகத்திலே முதல் இடத்தில் இருப்பதாக தமிழக சுகாதாரத்துறையின் தேசிய சுகாதாரப்பணிகள் இயக்குனர் தரமேஷ்அகமது கடிதம் அனுப்பியுள்ளார்.

நம்மை காப்போம் 48 மருத்துவத் திட்டம் மட்டுமில்லாது, சிகிச்சை வசதிகள், அதன் கட்டமைப்பு, பணியாளர்கள் செயல்பாடுகள் அடிப்படையில் பிற மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு முன்மாதிரியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் விபத்து அவசர சிகிச்சை மையம் சிறப்பாக செயல்படுவதாக பாராட்டப்பட்டுள்ளது.

சமீபத்தில் மருத்துவமனை ஆய்வுக்கு வந்த உலக வங்கி குழுவும், அரசு ராஜாஜி மருத்துவமனையின் விபத்து அவசர சிகிச்சை மையத்தின் செயல்பாடுகளை பாராட்டி நாடு முழுவதும் இதுபோன்ற அவசர சிகிச்சை மையங்களை நாடு முழுவதும் அமைக்க பரிந்துரை செய்தது.

இந்த அவசர சிகிச்சை மையத்திற்கு வரும் நோயாளிகள் விவரம் உடனடியாக கணிணியில் பதிவு செய்து அவர்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை, ஆய்வுகள், தேவைப்படும் சிகிச்சைகள் அப்டேட் செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் அடுத்தடுத்த சிப்ட் களில் வரும் மருத்துவர்கள், நோயாளிகளுக்கு தடையின்றி சிகிச்சை வழங்க உதவியாக உள்ளது.

மருத்துவமனைக்கு இத்தகைய பெருமையை தேடித்தந்த அவசர சிகிச்சைப்பிரிவுத் தலைவர் சேரவணகுமார், எலும்பியல் மருத்துவ நிபுணர் திருமலை முருகன், நரம்பியல் அறுவை சிகிச்சை பாபா டவுலத்கான் மற்றும் மருத்துவர்கள், பணியாளர்களை பாராட்டுகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.