சிங்கப்பூரில் தமிழ்ப்பெண்ணை திருமணம் செய்த நபர் செய்த மோசடி வேலைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில் மொத்த குடும்பமும் வசமாக சிக்கியுள்ளது.
தமிழகத்தின் புதுக்கோட்டையை சேர்ந்தவர் சோலை கணேசன் (38). இவர் சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு ஆரோக்கிய மேரி (36) என்பவருடன் பேஸ்புக் மூலம் பழகி அறிமுகமாகி உள்ளார்.
பின்னர் இருவரும் கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதி சிங்கப்பூரில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்தின் போது ரூ.72 லட்சத்து 85 ஆயிரத்தை வரதட்சணையாக ஆரோக்கியமேரி கொடுத்துள்ளதாக தெரிகிறது.
இந்த சூழலில் சோலை கணேசன் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அவருக்கு 17 வயது சிறுமியுடன் திருமண ஏற்பாடுகள் நடந்தது.
இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்த ஆரோக்கியமேரிக்கு கணவரின் திருமண ஏற்பாடு குறித்த விவரம் தெரியவந்தது.
அப்போது அவர் விசாரித்ததில் சோலை கணேசனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி பிரிந்திருந்ததும், அந்த திருமணத்தை மறைத்து தன்னை ஏமாற்றி 2-வது திருமணம் செய்ததும் தெரிந்தது. மேலும் தற்போது 3-வது திருமணத்திற்கு முயன்று வருவதும் தெரிந்தது.
இதையடுத்து அதிர்ச்சியடைந்த மேரி இந்த மோசடி தொடர்பில் பொலிசில் புகார் அளித்தார்.
இதில் சோலை கணேசனை பொலிசார் கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அதன்படி சோலை கணேசனுக்கு 37 ஆண்டு சிறை தண்டனை, 2.80 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
உடந்தையாக இருந்த தாய் ராஜம்மாளுக்கு 15 ஆண்டு சிறை, 1 லட்சம் ரூபாய் அபராதம், தங்கை கமலஜோதிக்கு 15 ஆண்டு சிறை, 1.80 லட்சம் ரூபாய் அபராதம், தம்பி முருகேசனுக்கு 16 ஆண்டு சிறை, 1.60 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் சோலை கணேசனின் சித்தப்பா நாராயணசாமிக்கு 15 ஆண்டு சிறை, 1.90 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.