மாண்டியா மிம்ஸ் அரசு மருத்துவமனையில் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உடல்நலக்குறைவு காரணமாக ராமநகரைச் சேர்ந்த ஒருவர் தனது மகளை மிம்ஸ் அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சைக்காக அனுமதித்தார். அந்தப் பெண்ணிற்கு நேற்று ஸ்கேனிங் செய்ய டாக்டர்கள் அறிவுறுத்தினர். ஸ்கேன் எடுப்பதற்காக ஸ்கேன் மையத்திற்குச் சென்று உள்ளார். ஆனால் அங்கிருந்த ஊழியர்கள் மருத்துவமனையில் ஸ்கேன் சரியாக வேலை செய்யவில்லை, நீங்கள் வெளியே சென்று ஸ்கேன் எடுத்துக்கொண்டு வாருங்கள் என்று மருத்துவமனை ஊழியர்கள் அலட்சியமாக நோயாளியின் தந்தையிடம் கூறியுள்ளனர்.
ஆனால் ஆம்புலன்ஸ் அல்லது சக்கர நாற்காலி என எதுவும் மருத்துவமனை ஏற்பாடு செய்து கொடுக்கவில்லை எனத் தெரிகிறது. இந்த சூழ்நிலையில் பெண்ணின் தந்தை சக்கர நாற்காலி இல்லாமல் 1 கிலோமீட்டர் தூரம் நோயாளி சிறுமியை கைகளில் தூக்கிக்கொண்டு ஸ்கேன் எடுக்க சென்ற சம்பவம் நேற்று அரங்கேறியது. இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது.
மிம்ஸ் அரசு மருத்துவமனை ஊழியர்களின் பொறுப்பின்மையால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கடும் கோபத்தில் இருந்தனர். இந்நிலையில் உரிய நேரத்தில் அந்த சிறுமிக்கு சிகிச்சை அளிக்காததால் அந்த சிறுமி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். மிம்ஸ் அரசு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியப் போக்குதான் சிறுமி உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM