புதுடெல்லி: டெல்லியில் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் வந்த ரயிலில் மோதி இரண்டு குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சண்டிகரில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த ரயில் முன்பாக, தனது 2 குழந்தைகளுடன் தண்டவாளத்தில் நின்றிருந்த பெண் உட்பட மூன்று பேரும் ரயில் மோதி பலியாகினர். தகவலறிந்த ரயில்வே காவல் துறை, ரயில் தண்டவாளத்தில் உடல் சிதறி கிடந்த 2 குழந்தைகள் உட்பட 3 பேரின் சடலங்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து டெல்லி போலீசார் கூறுகையில், ‘ஹோலம்பி கலான் ரயில் நிலைய எல்லையில், இந்த சம்பவம் நடந்துள்ளது. தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இறந்த குழந்தைகளில் ஒருவருக்கு ஏழு வயதும், மற்றொருவருக்கு மூன்று வயதும் இருக்கும். பலியான மூவர் குறித்தும் எந்த தகவலும் இல்லை. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’ என்றார். சம்பவம் குறித்து அமிர்தசரஸ் இன்டர்சிட்டி லோகோ பைலட் அசோக் கூறுகையில், ‘அந்தப் பெண் வேண்டுமென்றே தனது இரண்டு குழந்தைகளுடன் ரயில் பாதைக்கு வந்தார். மணிக்கு 100 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் சென்ற ரயிலை நிறுத்த முடியவில்லை. அதனால், மூவரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர்’ என்றார்.