இந்தியாவை பொறுத்தவரையில் செல்போன் பயனாளர்கள் தற்போது 4ஜி இணைய சேவையை பயன்படுத்தி வருகின்றனர். 4ஜி மூலம் அதிவேக இணைய சேவையை பயணாளிகள் பெற்று வருகின்றனர். இந்த நிலையில், இதனை விட அதிவேக இணைய சேவையை பெரும் பொருட்டு 5ஜி சேவையை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. மேலும் 5ஜி நடைமுறைக்கு வந்தால் 4ஜியைக் காட்டிலும் பயன்பாடு அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
அதன்படி, தொலை தொடர்புத்துறையை மேம்படுத்த 2022ஆம் ஆண்டில் 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்படும் எனவும், 2023ஆம் ஆண்டுக்குள் 5ஜி சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கடந்த பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது.
முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டிராய் அமைப்பு 5ஜி ஏலம் குறித்த விரிவான தகவலை வெளியிட்டது. அதில் விலை, அளவு மற்றும் நிபந்தனைகள் இடம்பெற்றிருந்தன. ஆனால், கட்டணம் அதிகமாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது. அதேபோல், சசி தரூர் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழுவும் 5ஜி அலைக்கற்றைக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டண விவரம் மிக அதிகம் என்று தனது பரிந்துரையை சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. மேலும், தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை (டிராய்) ஆணையமும் இக்கருத்தை சுட்டிக்காட்டியது.
இந்த நிலையில், இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தாண்டு ஜூலைக்குள் 5ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெறும் என தெரிகிறது. 4ஜி சேவையை விட பத்து மடங்கு வேகம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. 5ஜி அலைக்கற்றை 20 ஆண்டுகளுக்கு ஏலம் விடப்பட உள்ளது.