குடியரசுத் தலைவர் தேர்தலில், பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக, மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தை, தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி புறக்கணித்துள்ளது.
இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவராக, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பதவி வகிக்கிறார். இவரது பதவிக் காலம், வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதை அடுத்து, நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அடுத்த மாதம் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதில் பதிவாகும் வாக்குகள், ஜூலை மாதம் 21 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து பொது வேட்பாளருக்கு ஆதரவு அளித்தால், தேர்தல் நடைபெறாமல், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார். தேர்தல் நடைபெற்றால், குடியரசுத் தலைவரை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுப்பர்.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகள் சார்பில், பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக, தலைநகர் டெல்லியில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தலைமையில், இன்று பிற்பகல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொள்ளும்படி, 22 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு, அவர் ஏற்கனவே கடிதம் எழுதி இருந்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி சார்பில், மூத்தத் தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், ரன்தீப் சுர்ஜேவாலா, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவரும், தெலங்கானா மாநில முதலமைச்சருமான சந்திரசேகர் ராவ் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என முடிவு செய்துள்ளார். இதேப் போல், ஆம் ஆத்மி கட்சியும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் ஒற்றுமையை பரிசோதிக்கும் வகையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒற்றுமையை நிலைநாட்ட எதிர்க்கட்சிகள் போராடி வரும் நிலையில், டி.ஆர்.எஸ். உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது, பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.