மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத்தில் ஆள்சேர்ப்பதற்கான புதிய திட்டமான அக்னிபத் எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த திட்டத்தின்படி, 17.5 முதல் 21 வயதுடைய இருபாலரும் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளில் சேரலாம். இந்த திட்டத்தின் கீழ், பணியில் சேருவோர் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவர். அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வேண்டும். நடப்பாண்டில் 46,000 அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த திட்டத்தை ஆதரித்தும், விமர்சித்தும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேசமயம், இந்தத் திட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பீகார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இளைஞா்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
பாட்னா, முஸாஃபா்பூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகளில், ரயில் நிலையங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்திற்கிடையே, சாலையில் டயர்களை எரித்தும் பேருந்துகளை கல்வீசித் தாக்கியும் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. ரயில்கள் மீது கல்வீசித் தாக்கியதாக தகவல்கள் வெளியான நிலையில், ரயில்களுக்கு தீ வைத்தும் கொளுத்தப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதால், அங்கு பதற்ற சூழல் நிலவுகிறது. இந்தத் திட்டத்தில் 4 ஆண்டு கால பயிற்சிக்குப் பிறகு, 25 சதவீத பேர் மட்டுமே நிரந்தரப் பணிக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்று மத்திய அரசு கூறியுள்ள நிலையில், 4 ஆண்டுகளுக்கு பிறகு என்ன செய்வது என்று கேள்வி எழுப்பும் இளைஞர்கள், ராணுவத்தில் தங்களுக்கு நிரந்தரப்பணி வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.
முன்னதாக, “பாகிஸ்தான், சீனா என இரண்டு முனைகளிலிருந்து அச்சுறுத்தல்களை இந்தியா எதிர்கொள்ளும் போது, அக்னிபத் திட்டம் நமது ஆயுதப் படைகளின் செயல்பாட்டுத் திறனைக் குறைக்கும். நமது படைகளின் கண்ணியம், மரபு, வீரம், ஒழுக்கம் ஆகியவற்றில் சமரசம் செய்வதை பாஜக அரசு நிறுத்த வேண்டும்.” என ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.