மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 14-ம் தேதி ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்கான புதிய திட்டமான `அக்னிபத்’ என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அரசின் இந்தத் திட்டத்தை ஆதரித்தும் விமர்சித்தும் பலர் கருத்து தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில், இந்தத் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என பீகார், உத்தரப்பிரதேசத்தில் ராணுவப் பணிக்காகத் தயாராகி வந்த இளைஞர்கள் பலர் தொடர்ந்து இரண்டாவது நாளாகப் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்தப் போராட்டம் இன்று வன்முறையாக வெடித்தது. பீகாரில் சாலைமறியல், ரயில்மறியல் எனப் போராட்டம் தீவிரமடைந்துவருகிறது.
பாட்னாவின் பாபுவா ரோடு ரயில் நிலையத்தில் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி, ஒரு பெட்டிக்கு கும்பல் ஒன்று தீ வைத்தது. மேலும் அர்ரா என்னும் பகுதியிலுள்ள ரயில் நிலையத்தில், காவல்துறையினர் மீது கற்களை வீசி எறிந்த போராட்டக்காரர்களின் பெரும் கூட்டத்தைக் கலைக்க, காவல்துறை கண்ணீர்ப் புகைக்குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
போராட்டக்காரர்கள் மரச்சாமான்களை தண்டவாளத்தில் வீசி எரித்ததால் ஏற்பட்ட தீயை ரயில்வே ஊழியர்கள் அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஜெகனாபாத் எனும் பகுதியில், ரயில் தண்டவாளத்தை அகற்ற முயன்ற போராட்டக்காரர்கள் மீது கல்லெறிந்து காவல்துறை அப்புறப்படுத்த முயன்ற சம்பவமும் நடந்தது. போராட்டக்காரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டு மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். நவாடா-வில், இளைஞர்கள் குழுக்கள் டயர்களை எரித்து, அக்னிபத் திட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், நவாடா ஸ்டேஷனில் ரயில் தண்டவாளத்தை மறித்து, தண்டவாளத்தில் டயர்களை எரித்தனர். இதனால் ரயில்வே சொத்துகளுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. சஹர்சாவில், ரயில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதவாறு காவல்துறை அவர்களை அப்புறப்படுத்த முயன்றபோது, மாணவர்கள் ரயில் நிலையத்துக்குத் திரண்டு வந்து கற்களை வீசினர். சப்ராவில் போராட்டக்காரர்கள் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாநில சாலைப் பேருந்துகளை அடித்து நொறுக்கியுள்ளனர். போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த காவல்துறை பல்வேறு வகையில் தொடர்ந்து முயன்றுவருகிறது.
இந்த நிலையில் போராட்டக்காரர்களின் கோரிக்கையாக, நான்காண்டு காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யும் அக்னிபத் திட்டத்தைக் கைவிட வேண்டும். ஏனென்றால் அரசின் இந்தத் திட்டம் பணி நிரந்தரம் மற்றும் ஓய்வூதியப் பலன்கள் இல்லாமல் பெரும்பாலானவர்களுக்குக் கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என்பதற்காகத்தான் கொண்டுவரப்பட்டுள்ளது. பழைய முறைப்படி, 16.5 முதல் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் பெறும் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்டவை முன்வைக்கப்படுகின்றன.