பீகார்: இளைஞர்களை 4 ஆண்டுகால பணியில் ராணுவத்தில் சேர்க்கும் அக்கினிபாத் திட்டத்தை ஒன்றிய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். அந்த மாநிலத்தின் பக்சார், பெகுசராய் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. இந்த திட்டம் கொண்டுவரப்பட்டால், வீரர்கள் குறுகிய காலம் மட்டுமே பணியில் இருக்க முடியும் என்றும், அதன்பிறகு வேறு வேலையை தேடி அலைய வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர்கள் கூறினர். இதனால் ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்கள் தங்களுக்கு கிடைக்காது எனவும் அவர்கள் தெரிவித்தனர். 4 ஆண்டுகளுக்கு பிறகு தங்கள் நிலை என்ன? என கேள்வி எழுப்பிய இளைஞர்கள் மக்கள் அனைத்தையும் அறிந்திருக்கிறார்கள் என்பதை ஆட்சியர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தான் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் அவர்கள் கூறினர். அவர்கள் டயர்களை எரித்து, பேருந்துகளை மறித்தும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல வேலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ராணுவ உடற்கல்வி தேர்வில் தேர்வான இளைஞர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர். கொரோனா காரணமாக தங்களுக்கு 2 ஆண்டுகளாக எழுத்துதேர்வு நடத்தப்படாத நிலையில், தற்போது இந்த திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளதாக அவர்கள் கூறினர். உடனடியாக தங்களுக்கு எழுதுதேர்வை கொண்டுவர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், அக்கினிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் போராட்டக்காரர்கள் ரயிலுக்கு தீ வைத்ததால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. ராணுவத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் அக்கினிபாத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் வலுத்து வருகிறது. இதைத்தொடர்ந்து, பீகார், உத்திரப்பிரதேசம், அரியானா மாநிலங்களில் ராணுவ பணியில் சேர பயிற்சி பெற்று வருபவர்களும் ஒன்றிய அரசை கண்டித்து போராடி வருகின்றனர். இந்த அக்கினிபாத் திட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.