அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக பீகாரில் இளைஞர்கள் போராட்டம் – 3 ரயிலுக்கு தீவைப்பு – வன்முறை! வீடியோக்கள்

பாட்னா: மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்துக்கு இளைஞர்களிடையே அதிருப்தி எழுந்துள்ள நிலையில், இந்த திட்டத்தை எதிர்த்து பீகார் மாநிலத்தில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் வன்முறையான நிலையில்,  போராட்டக்காரர்கள் 3 ரயிலுக்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான், மேற்கு வங்க மாநிலத்திலும் சமூக விரோத கும்பல் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறது.  நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர துணை ராணுவப்படை குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

ராணுவத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் பணியாக அக்னிபாத் என்ற திட்டதை மத்தியஅரசு அறிவித்து உள்ளது. அதற்காக இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது  அக்னிபாத் என்ற இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணிக்கு அமர்த்தப்பட உள்ளனர். இதற்கான வயது வரம்பு 17முதல் 21 வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் இளைஞர்கள் அனைவரும் ராணுவ பயிற்சி மேற்கொள்ள வாய்ப்ப்பு உருவாகும் இன்றும், இது பாதுகாப்பு துறை பலத்தை ஏற்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது.

ஆனால், ராணுவத்தை ஒரு சேவையாக பார்க்கும் பீகார், பஞ்சாப் உள்பட சில மாநிலங்களில், ராணுவ வீரர் ஆக வேண்டும் என்ற  தங்களின் லட்சியக் கனவுகளை களைக்கும் விதமாக அக்னிபாத் திட்டம் உள்ளது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த திட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதுபோல பல மாநிலங்களில் இளைஞர்களும் மத்தியஅரசின் அறிவிப்புக்கு தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் இன்று 2வது நாளாக போராட்டம் நடைபெறுகிறது.

பாஜக அலுவலகம் எரிக்கப்படும் வீடியோ:

 

இன்றைய போராட்டம்  வன்முறையாக மாறியுள்ளது. போராடும் வீரர்கள் திடீரென சாலையில் இருந்த கற்களை எடுத்து காவல்துறையினர் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் ரெயில் நிலையங்களுக்குள் நுழைந்த அவர்கள் கற்களை எடுத்து ரெயில்கள் மீது வீசினார்.  இதனால் ஒரு கட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கியை காட்டி போராட்டக்காரர்களை விரட்டினர்.

பீகாரில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சாப்ரா என்ற இடத்தில் ரயிலுக்கு தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ரயில் நிலையங்களில் இருந்த இருக்கைகள் உள்ளிட்ட பொருட்களையும் தீ வைத்து எரித்ததால் பதற்றமான சூழல் உருவானது.  பீகாரின் நவாடா என்ற இடத்தில் பாஜக அலுவலகத்தை அடித்து நொறுக்கி இளைஞர்கள் தீ வைத்தனர்.

இதற்கிடையில் பீகார் மாநிலத்தின், நவாடா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் சாலையில் வாகனங்களின் டயர்களை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். நவாடா என்ற இடத்தில் பாஜக அலுவலகத்தை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். பிரதமர் மோடிக்கு எதிராக தனது கோஷங்களையும் எழுப்பினர். இதையடுத்து அவர்களை கண்ணீர் புகை குண்டு வீசி காவல்துறையினர்  கலைத்தனர். இந்த நிலையில் போராட்டக்காரர்கள் அங்கு ரயில்நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ரயிலுக்கு தீ வைத்தனர். இதனால் அந்த ரயில் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் குறுகிய கால மற்றும் நிரந்தர அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். குறுகிய கால அடிப்படையில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் 10 ஆண்டுகளும், நிரந்தர அடிப்படையில் தேர்வு செய்யப்படுவோர் ஓய்வு பெறும் வயது வரையிலும் பணிபுரிய முடியும். இதில் குறுகிய கால அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் விருப்பப்பட்டால் தனது பணிக்கால முடிவில் 4 ஆண்டுகள் பணி நீட்டிப்பு பெற்றுக் கொள்ளலாம். இதுவே இந்திய ராணுவத்தில் தற்போது வரை பின்பற்றப்படும் நடைமுறையாக இருந்தது.

அக்னிபாத் திட்டம் என்பது என்ன?

இந்த நிலையில், ராணுவத்தில் அதிக அளவில் இளைஞர்களை சேர்க்கும் வகையிலும், வேலைவாய்ப்பை பெருக்கும் விதமாகவும் ‘அக்னிபாத்’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, இந்திய ராணுவத்தில்  4 ஆண்டு பணிப்புரியும் திட்டத்தை மத்திய பாதுகாப்புத்துறை அறிவித்தது. . இந்த திட்டத்துக்கு பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, இந்த திட்டம் தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்த திட்டத்தில் 17 வயது முதல் 21 வயதுடைய இளைஞர்கள் ஒப்பந்தம் அடிப்படையில் நிரந்தர ஊதியத்தில் பணியில் சேரலாம். 4 ஆண்டு களுக்கு பிறகு தகுதியின் அடிப்படையில் ஆட்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நிரந்தரப்பணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அக்னிபாத் திட்டம் மூலம் இந்தியாவின் மொத்த ராணுவ வீரர்களின் பணி நியமனத்தில் 25% பேரை ஒப்பந்த முறையில் மத்திய அரசு மணியமர்த்த உள்ளது. இதன் மூலம் மூப்படையிலும் வீரர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்னவென்றால் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு ரூ.30,000 சம்பளத்தோடு, காப்பீடு, தங்குமிடம், உணவு என அனைத்து சலுகைகளும் கிடைக்கிறது.

Video Courtesy: Thanks ANI

ரயில்கள் கொளுந்துவிட்டு எரியும் வீடியோ:

இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

  • அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் (ராணுவம், விமானப்படை, கடற்படை) இளைஞர்களும், இளம்பெண்களும் சேரலாம். 17.5 வயது முதல் 21 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேர தகுதியானவர்கள் ஆவர்.
  • ராணுவத்தில் சேருவதற்கு இப்போது நிர்ணயிக்கப்பட்டிருக்கும் உடற்தகுதிகளே அக்னிபாத் திட்டத்தில் சேருபவர்களுக்கும் பொருந்தும். 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.
  • அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு முதலாம் ஆண்டில் வருடத்துக்கு ரூ.4.76 லட்சம் ஊதியமும், கடைசி, அதாவது 4-வது ஆண்டில் வருடத்துக்கு ரூ.6.92 லட்சம் சம்பளமும் வழங்கப்படும். பணி நிறைவின் போது ஒவ்வொரு வீரர்களுக்கும் தலா ரூ. 11.7 லட்சம் (சேவை நிதி) வழங்கப்படும்.
  • மொத்தம் 45 ஆயிரம் பேர் இந்த திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்க்கப்படவுள்ளனர். 4 ஆண்டு பணிக்காக இவர்களுக்கு 6 மாத பயிற்சி வழங்கப்படும்.
  • பணிக்காலம் முடிவடைந்ததும் தேர்வு செய்யப்பட்டவர்களில் 25 சதவீதம் பேர் நிரந்தர ராணுவப் பணிக்கு சேர்த்துக் கொள்ளப்படுவர். அவர்களின் விருப்பம், பணித் திறன் மற்றும் பங்களிப்பு ஆகியவற்றை பொறுத்து இந்த நடவடிக்கை இருக்கும். மீதமுள்ள 75 சதவீதம் பேர் ராணுவத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.
  • பணிக்காலத்தில் வீர மரணம் அடையும் அக்னிபாத் வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடியும், அவர்கள் பணிபுரிந்திருக்க வேண்டிய காலத்துக்கான ஊதியமும் வழங்கப்படும்.
  • பணியின் போது அக்னிபாத் வீரர்கள் உடல் ஊனமுற்றால் அவர்களுக்கு வட்டியுடன் கூடிய முழு சேவை நிதியும், அவர்கள் பணிபுரிந்திருக்க வேண்டிய காலத்துக்கான ஊதியமும் வழங்கப்படும். இதுதவிர, ஊனத்தின் தீவிரத்தை பொறுத்து அவருக்கு ரூ.46 லட்சம் வரை வழங்கப்படும்.
  • இன்றில் இருந்து 90 நாட்களுக்கு பிறகு அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பொதுவாக ராணுவ வீரர்களுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து மரியாதைகளும், சலுகைகளும் இந்த ஒப்பந்த பணியாளர்களுக்கும் கிடைக்கும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.