திஸ்பூர்: அசாமில் அடித்து துவைத்த கனமழையால் 8 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அசாமில் கடந்த மாதம் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தால் அம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதி பாதிக்கப்பட்டது. வெள்ளபாதிப்பிலிருந்தே அசாம் மெல்ல மீண்டு இருக்கும் நிலையில் கடந்த 2 நாட்களாக தலைநகர் கவுஹாத்தி உள்ளிட்ட பகுதிகளில் மழை இடைவிடாமல் பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. போரொகான் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்துவிட்டனர். சாலைகள் எங்கும் 3 அடிக்கு மேலாக மழைநீர் தேங்கி இருப்பதால் வாகனஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து பெய்து வரும் மழையால் தாரம், தேமாஜி, டைமகாஷோ, கோல்பெரா, தெற்கு சர்வாரா ஆகிய மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. குறிப்பாக, தலைநகர் கவுஹாத்தியை உள்ளடக்கிய கம்ரூக் மாவட்டம் பலத்த சேதத்தை சந்தித்தது. கவுஹாத்தி சுற்றுவட்டாரங்களில் மட்டுமே கடந்த 13ம் தேதி முதல் 12 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை படை தெரிவித்தது. தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் போர்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. பிரம்மபுத்திரா ஆற்றில் இருக்கரைகளையும் தொட்டு வெள்ளம் பாய்வதால் அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்துள்ளது. இதனிடையே அசாமில் பலத்த மற்றும் மிக பலத்த மழை தொடரும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள்ளது.