புதுடெல்லி: நாட்டின் முப்படைகளுக்கும் ஆள் சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஒன்றிய ஆயுதப்படை போலீஸ், அசாம் ரைபிள்ஸ் பிரிவில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.முப்படைகளில் இளம் வீரர்களை அதிகளவில் சேர்ப்பதற்கான புதிய அக்னிபாத் ஆட்சேர்ப்பு திட்டத்திற்கு ஒன்றிய பாதுகாப்பு அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இதன்படி, இத்திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேரும் அக்னி வீரர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருப்பார்கள். முதல் 6 மாதங்கள் வழக்கமான ராணுவ பயிற்சிகள் வழங்கப்படும். இவர்களில் 25 சதவீதம் பேர் ராணுவத்தில் நிரந்தரமாக 15 ஆண்டு ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள். மீதமுள்ள 75 சதவீதம் பேர் ஓய்வூதியம் இல்லாமல் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். இந்நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அதிகாரப்பூர்வ டிவிட்டரில், `அக்னிபத் திட்டம், நாட்டின் இளைஞர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்காக பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நான்கு ஆண்டுகள் நிறைவு செய்த அக்னி வீரர்களுக்கு, ஒன்றிய ஆயுத போலீஸ் படை, அசாம் ரைபிள்ஸ் பிரிவுகளில் முன்னுரிமை அளிக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம், நாட்டின் சேவை மற்றும் பாதுகாப்பு துறைக்கு மேலும் பங்களிக்க முடியும். இதற்கான விரிவான திட்டமிடல் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன,’ என்று கூறப்பட்டுள்ளது. அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து பீகார், ராஜஸ்தானில் இளைஞர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். * 3 ஆண்டு இளங்கலை படிப்பு ஒன்றிய கல்வி அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ‘அக்னி வீரர்களின் எதிர்கால தொழில் வாய்ப்புகளை மனதில் கொண்டு, 3 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பை ஒன்றிய கல்வி அமைச்சகம் தொடங்கும். இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக் கழகம் வழங்கும் இந்த பட்டப்படிப்புக்கு இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாட்டிலும் அங்கீகாரம் அளிக்கப்படும். இதற்காக ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவை இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்.’ என கூறியுள்ளனர்.