வாஷிங்டன்:’ஐ2யு2′ குழுவின் முதல் மாநாடு, அடுத்த மாதம் நடைபெற உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
உலககெங்கிலும் உள்ள அமெரிக்க கூட்டணி நாடுகள் புதிய உற்சாகத்துடன் செயல்பட, அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஐ2யு2 என்ற குழுவை உருவாக்கி உள்ளது.
இதில், இந்தியா, இஸ்ரேல், யு.ஏ.இ., அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த குழுவின் முதல் மாநாடு, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, அடுத்த மாதம் நடக்க உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்தது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அடுத்த மாதம், 13 – 16 தேதிகளில், மேற்காசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். அந்த நேரத்தில், இந்த மாநாட்டை நடத்த அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது.
இந்த மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நம் பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் நெப்தாலி பென்னட், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் ஸயீத் அல் நஹ்யான் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். அப்போது, உணவு பாதுகாப்பில் உள்ள நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
Advertisement