சென்னை: “அதிமுகவில் ஒற்றைத் தலைமை தேவையில்லை. ஜெயக்குமார் பேட்டியால்தான் இந்தப் பிரச்சினை உருவானது” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
அதிமுக பொதுக்குழு வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இது தொடர்பாக தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களுடன், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் கடந்த 14-ம் தேதி சென்னையில் ஆலோசனை நடத்தினர்.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ஒற்றைத் தலைமை குறித்தும் இன்று விவாதிக்கப்பட்டது. அந்த விவாதம் ஓர் ஆரோக்கியமான முறையில் இருந்தது. இதுதொடர்பாக பெரும்பான்மையான தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமைதான் தேவை என்பதை வலியுறுத்திக் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானங்களை இறுதி செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த தலைவர்கள் பொன்னையன், செம்மலை, முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதனிடையே, ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் விவாதத்தைக் கிளப்பியச் சூழலில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தொடர் தோல்விகளில் இருந்து மீள அனைவரும் இணைந்து கட்சியை நடத்த வேண்டும்.
பொதுக்குழு ஒப்புதல் பெற்று அடிப்படை உறுப்பினர்களால் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு, தேர்தல் ஆணையத்திடம் ஒப்புதல் பெறப்பட்டு, அமைப்பு தேர்தல் முடிந்து, தேர்வு செய்யப்பட்டுள்ள நிர்வாகிகள் பட்டியலை வைக்கும் இந்தப் பொதுக் குழுவில் ஒற்றைத் தலைமை போன்ற கருத்து தேவைதானா?
ஓர் அறையில் பேசவேண்டியதை வெளியில் பேசியது ஏன்? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியால்தான் பிரச்சினை பூதாகரமானது. ஒற்றைத் தலைமை கோரிக்கை ஏன் உருவாக்கப்பட்டது என எனக்கு தெரியவில்லை.
அதிமுகவில் என்னை ஓரம் கட்ட முடியாது. ஒற்றைத் தலைமை இந்த நேரத்தில் தேவைதானா என்ற நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. எந்தவித அதிகார ஆசையும் எனக்கு இல்லை. தொண்டர்களிடம் இருந்து என்னை பிரிக்க முடியாது” என்றார்.