சென்னை: அதிமுகவில் இரட்டைத் தலைமையே தொடர வேண்டும் என்று விரும்பும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், “ஒற்றைத் தலைமை தேவையில்லை” என்று தன் தரப்பு காரணங்களை அடுக்கியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தித் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நானும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து பொது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பின் கீழ் கட்சியை வழிநடத்தி வருகிறோம். நாங்கள் இணைய வேண்டுமென தொண்டர்கள் விரும்பினார்கள். அப்படி ஒரு சூழல் அப்போது உருவாகி இருந்தது.
அந்தச் சூழலில் ‘இரட்டைத் தலைமை என்பது சரிவருமா?’ என கேட்டேன். ‘அது சரிவரும்’ என தொண்டர்கள் சொன்னார்கள். ‘இருவரும் இணைந்து பணியாற்றினால் நன்றாக இருக்கும்’ என தெரிவித்தார்கள். அதன்படி இந்த ஆறு ஆண்டு காலமாக இருவரும் இணைந்து பணியாற்றி வருகிறோம்.
அனைத்தும் சுமுகமாக போய்க் கொண்டிருக்கிறது. நாங்கள் இருவரும் ஒற்றுமையாக இயங்கிக் கொண்டிருக்கிறோம். இத்தகையச் சூழலில் திடீரென இப்போது ஒற்றைத் தலைமை என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது இது விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது. சிலரது தூண்டுதலின் பேரிலேயே இது நடந்துள்ளது. இது தேவைதானா என்பதும் எனது கேள்வி.
பொதுச் செயலாளர் பொறுப்பு என்பது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரித்தானது. அவர்களைத் தவிர வேறு யாருக்கும் அது சேராது” என்று தெரிவித்துள்ளார்.
பின்னர் அவர் மாலையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியது: “தொடர் தோல்விகளில் இருந்து மீள அனைவரும் இணைந்து கட்சியை நடத்த வேண்டும்.
பொதுக்குழு ஒப்புதல் பெற்று அடிப்படை உறுப்பினர்களால் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு, தேர்தல் ஆணையத்திடம் ஒப்புதல் பெறப்பட்டு, அமைப்பு தேர்தல் முடிந்து, தேர்வு செய்யப்பட்டுள்ள நிர்வாகிகள் பட்டியலை வைக்கும் இந்தப் பொதுக் குழுவில் ஒற்றைத் தலைமை போன்ற கருத்து தேவைதானா?
ஓர் அறையில் பேசவேண்டியதை வெளியில் பேசியது ஏன்? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியால்தான் பிரச்சினை பூதாகரமானது. ஒற்றைத் தலைமை கோரிக்கை ஏன் உருவாக்கப்பட்டது என எனக்கு தெரியவில்லை.
அதிமுகவில் என்னை ஓரம் கட்ட முடியாது. ஒற்றைத் தலைமை இந்த நேரத்தில் தேவைதானா என்ற நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. எந்தவித அதிகார ஆசையும் எனக்கு இல்லை. தொண்டர்களிடம் இருந்து என்னை பிரிக்க முடியாது” என்றார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு ஏற்கெனவே தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலுக்கு நானும் எடப்பாடி பழனிசாமியும் ஒரே வேட்புமனு தாக்கல் செய்துள்ளோம்.
எந்தக் காரணத்திற்காகவும் அதிமுக இரண்டாக உடையக் கூடாது. எனவே, எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தைக்கு நான் தயாராக இருக்கிறேன். பொதுக்குழு கூடுவதற்கு முன்பாக நாங்கள் இணைந்து பேசி ஒரு முடிவெடுத்துவிட்டால், பொதுக்குழுவில் எந்தப் பிரச்சினையும் வராது.
அதிமுக பொதுக்குழுவில் பொதுச் செயலாளர் பதவி குறித்த தீர்மானத்தைப் பொறுத்தவரையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி அதனைக் கொண்டுவரவே முடியாது.
ஒற்றைத் தலைமை பிரச்சினையை எழுப்பியவர்களை எடப்பாடி பழனிச்சாமி கண்டிக்க வேண்டும். நான் எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்ததற்கு முக்கிய காரணமே அதிமுக தொண்டர்கள் தான். விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை” என்றார்.
சசிகலா குறித்து எழுந்த கேள்விக்கு விரிவாக பதிலளிக்க மறுத்த அவர், “அதிமுக ஒற்றைத் தலைமை குறித்து தனது கருத்தை எடப்பாடி பழனிசாமிதான் சொல்லவேண்டும். எனது கருத்தை தலைமைக் கழக நிர்வாகிகளிடம் கூறிவிட்டேன். பொதுக்குழுவை சுமுகமாக நடத்தியபின், அடுத்தகட்டம் குறித்து 14 பேர் கொண்ட குழு பேசி முடிவு செய்ய வேண்டும். இந்த விவகாரங்களில் அதிமுக தொண்டர்கள்மீது சிக்கலான கருத்துகளை திணித்து, அவர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். எனவேதான் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்” என்றார் ஓ.பன்னீர்செல்வம்.
முன்னதாக, 2019-ல் நடைபெற வேண்டிய அதிமுக அமைப்பு தேர்தல் கரோனாவால் தள்ளிப்போனது. இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பரில் பதவி வாரியாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி மற்றும் படிப்படியாக மாவட்டச் செயலர்கள், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் பெற வேண்டும். பின்னரே, தேர்தல் ஆணையத்தில் அதை சமர்ப்பிக்க முடியும். இதையொட்டி, அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் வரும் 23-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களுடன், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் கடந்த 14-ம் தேதி சென்னையில் ஆலோசனை நடத்தினர்.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ஒற்றைத் தலைமை குறித்தும் இன்று விவாதிக்கப்பட்டது. அந்த விவாதம் ஓர் ஆரோக்கியமான முறையில் இருந்தது. இதுதொடர்பாக பெரும்பான்மையான தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமைதான் தேவை என்பதை வலியுறுத்திக் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்” என்று கூறியிருந்தார். இதன் தொடர்ச்சியாகவே அதிமுகவில் மீண்டும் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடுபிடித்தது குறிப்பிடத்தக்கது.